உலகம் அழிய போகிறது… பட்டினி கிடந்தால் சொர்க்கம்… பாதிரியாரின் போதனை… பரிதாபமாக உயிரிழந்த 99 பேர்!

உலகம் அழிய போகிறது… பட்டினி கிடந்தால் சொர்க்கம்… பாதிரியாரின் போதனை… பரிதாபமாக உயிரிழந்த 99 பேர்!

Share it if you like it

உலகம் அழியப் போவதாகவும், பட்டினி கிடந்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று பாதிரியார் சொன்ன போதனையை நம்பி, பட்டினி கிடந்த மக்களில் 99 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

கென்யா நாட்டில் மாலிண்டி என்ற கடற்கரை நகரத்தில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல்’ என்கிற பெயரில் தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மெக்கன்ஜி நெதாங்கே. இவர், தனது போதனையின்போது ஒருநாள் ஏப்ரல் மாதம் 15-ம் தேதியுடன் இந்த உலகம் அழியப்போகிறது. ஆகவே, உண்ணாவிரதம் இருந்து இறப்பவர்கள் சொர்க்கத்தை அடைவதோடு, கடவுளின் தொண்டர்களாகவும் மாறுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

இதை நம்பி தேவாலயத்துக்கு வந்த ஏராளமானோர், அந்த தேவாலயத்திலேயே உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். இவ்வாறு உண்ணாவிரதம் இருந்தர்களில் பலர் உயிரிழக்க, தேவாலயத்தின் அருகிலுள்ள காடுகளில் புதைத்து வந்திருக்கிறார்கள். சிலரது உடல்கள் புதைக்கப்படாமல் அப்படியே வீசப்பட்டுக் கிடந்திருக்கின்றன. இது குறித்த தகவலை உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டது. இதையடுத்து, கென்ய போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், உண்ணாவிரதம் இருந்து இறந்தவர்கள் எண்ணிக்கை 99 என்பது தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருக்கிறார்கள். தோண்டத் தோண்ட பிணங்கள் வந்து கொண்டிருப்பதால் போலீஸார் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதேசமயம், உண்ணவிரதம் மேற்கொண்ட பலர், போலீஸாரின் தேடுல் வேட்டைக்கு பயந்து ஷகாகோலா காட்டுப் பகுதிக்குள் சென்று புதருக்குள் மறைந்து கொண்டார்கள்.

இவர்களையும் போலீஸார் மீட்டு வருகின்றனர். இவர்களின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், உணவு கொடுத்தாலும் சாப்பிட மறுப்பதாகவும், முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் மறுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அனைவரும் வாயை மூடிக் கொண்டு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று பிடிவாதமாக கூறிவருகிறார்களாம். அந்தளவுக்கு பாதிரியார் நெதாங்கேவின் போதனை மக்களை மாற்றி இருக்கிறது. மேலும், மாலிண்டி நகரில் 212 பேரை காணவில்லை என்று கென்ய செங்சிலுவைச் சங்கத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it