கேரளாவில் மதம் மாறியதால் தேவிகுளம் எம்.எல்.ஏ.வின் வெற்றி செல்லாது என்று அம்மாநில உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்திருக்கிறது.
கேரளாவில் 2021-ல் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதில், தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டவர் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த ராஜா. இத்தொகுதி தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டு, பட்டியலின சமூக மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலில் ராஜா வெற்றி பெற்றார். ஆனால், அவர் கிறித்தவ மதத்திற்கு மாறிவிட்டார். எனவே, ராஜாவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமார், கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். அதாவது, பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் பட்டியல் இனத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ராஜாவின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, தேவிகுளம் தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்றம், சி.பி.எம். எம்.எல்.ஏ. ராஜாவையும் தகுதி நீக்கம் செய்திருக்கிறது. ராஜா தற்போது பட்டியலிடப்பட்ட ஜாதி அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. ராஜா மதம் மாறிய கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது.