தங்கக் கடத்தலில் பினராயிக்கும் தொடர்பு: ஸ்வப்னா அதிரடி!

தங்கக் கடத்தலில் பினராயிக்கும் தொடர்பு: ஸ்வப்னா அதிரடி!

Share it if you like it

தங்கம் கடத்திய வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக, அவரது அலுவலக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கூறியிருப்பது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐக்கிய அரசு அமீரகத்தின் பெயரில், கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தப்படவிருந்த ரூ.14.82 கோடி மதிப்புள்ள தங்கத்தை, கடந்த 2020-ம் ஆண்டு மத்திய சுங்கத்துறை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த என்.ஐ.ஏ., உ.பா. சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, ஸ்வப்னா சுரேஷை 2020 ஜூலை மாதம் பெங்களூருவில் கைது செய்தது. மேலும், கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இதில், ஸ்வப்னா சுரேஷ் கேரள முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தக் கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயன்,  முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த சூழலில், ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், தான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். அதோடு, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் நீதிமன்றத்தில் வெளியிடப் போவதாகவும் கூறினார். இந்த நிலையில், முக்கியமான இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் நேற்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். அப்போது, மேற்படி கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியதாகத் தெரிகிறது. ஸ்வப்னா சுரேஷின் இந்த வாக்கு மூலம் கேரளா மட்டுமன்றி இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it