வாரணாசி நீதிபதிக்கு அடிப்படைவாதிகள் மிரட்டல் கடிதம்!

வாரணாசி நீதிபதிக்கு அடிப்படைவாதிகள் மிரட்டல் கடிதம்!

Share it if you like it

வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வுக்கு உத்தரவிட்ட நீதிபதி ரவிக்குமார் திவாகருக்கு, அடிப்படைவாதிகளிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி (கியான்வாபி) மசூதி இருக்கிறது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கௌரி அம்மன் சிலை இருக்கிறது. இங்கு ஹிந்துக்கள் தினசரி பூஜை நடத்தி வந்த நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்ட பிறகு, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூஜை நடத்த அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆகவே, இங்கு தினசரி பூஜை செய்ய அனுமதிக்குமாறு டெல்லியைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும், ஞானவாபி மசூதி ஹிந்துக் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்கிற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

ஆகவே, இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மசூதியில் வீடியோ ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவினர் கடந்த மாதம் ஞானவாபி மசூதியை ஆய்வு செய்தனர். அப்போது, ஆய்வு முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது மசூதியில் உடலை சுத்தம் செய்யும் குளத்திற்குள் சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், வழக்கு விசாரணை சூடுபிடித்தது. இதற்காகத்தான் நந்தி பெருமான் 350 ஆண்டுகளாகக் காத்திருந்தாரோ என்று ஹிந்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வந்தனர். அதேசமயம், மசூதி தரப்பிலோ, அது செயற்கை நீரூற்று என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட நீதிபதி ரவிக்குமார் திவாகருக்கு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில், “ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்துவது வழக்கமான நடைமுறைதான் என்று கூறுகிறீர்கள். நீங்கள் ஒரு இந்துமத வழிப்பாட்டாளர். மசூதியை கோயிலாக அறிவிப்பீர்கள். ஒரு இந்து நீதிபதியிடம் இருந்து எந்தவொரு இஸ்லாமியரும் நீதியை எதிர்பார்க்க முடியாது. ஒரு ‘காஃபிர், மூர்த்திபூஜக்’ ஹிந்து நீதிபதி” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கடிதத்தின் நகல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது தொடர்பாக நீதிபதி ரவிக்குமார், உத்தரப் பிரதேச மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை), காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் வாரணாசி காவல் ஆணையர் அலுவலகம் ஆகியோருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அதிகாரிகளுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “இஸ்லாமிய ஆகாஸ் இயக்கத்தின் சார்பில் காஷிப் அகமது சித்திக் என்பவர் இக்கடிதத்தை எழுதியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இக்கடிதம் பதிவுத் தபால் மூலம் எனக்கு கிடைத்தது” என்று கூறியிருக்கிறார். வாரணாசி போலீஸ் கமிஷனர் சதீஷ் கணேஷும், நீதிபதியின் கடிதம் கிடைத்ததை உறுதி செய்திருக்கிறார். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் வருணா விசாரணை நடத்தி வருகிறார். நீதிபதியின் பாதுகாப்பிற்காக மொத்தம் 9 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.


Share it if you like it