முல்லை பெரியாறு அணையை இடிக்க கேரளா தீர்மானம்: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு!

முல்லை பெரியாறு அணையை இடிக்க கேரளா தீர்மானம்: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு!

Share it if you like it

முல்லைப் பெரியறு அணையை இடிக்க கேரள மாநிலத்திலுள்ள பஞ்சாயத்து நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது முல்லை பெரியாறு அணை. தமிழகத்தின் தேனி​,​ திண்டுக்கல்​,​ மதுரை​,​ சிவகங்கை, ராமநாதபுரம்​,​ விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்குவது இந்த அணைதான். ஆனால், தமிழகத்துக்கு தண்ணீர் விடக்கூடாது என்பதற்காக, கேரள மாநில அரசியல்வாதிகளும், தனியார் அமைப்புகளும் முல்லைப் பெரியாறு அணை குறித்து தொடர்ந்து விஷமப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், எந்த நேரத்திலும் அணை உடையலாம் என்று பொய்யான தகவலை பரப்பி வந்தனர். இதனால், அணையின் நீர்மட்டத்தை 132 அடியாக குறைத்தனர்.

இதையடுத்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பல்வேறு நிபுணர் குழுக்களை அனுப்பி அணைைய சோதனை செய்தது. இதில், அணை வலுவாக இருப்பதாக நிபுணர் குழு தெரிவித்ததைத் தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. எனினும், அணை பலவீனமாக இருப்பதாக மீண்டும் மீண்டும் பொய்ப் பிரசாரம் செய்து வரும் கேரள அரசியல்வாதிகள், அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களையும் நடந்தி வருகின்றனர். இந்த சூழலில்தான், இடுக்கி மாவட்ட​ம் தொடுபுழா அருகே​​​​​ உள்ள வெள்ளியமட்ட​ம் பஞ்சாய​​த்தில் முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான், சேவ் கேரளா பிரிகேட் அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் ரசல் ஜோய், முல்லை பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருக்கும் அனைத்து பஞ்சாயத்துகளும்​ ​தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் அனுப்பினார். அவரது வேண்டுகோளை ஏற்றுத்தான், தற்போது வெள்ளியமட்டம் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.​ இதனால், தமிழக விவசாயிகள் கடும் ஆவேசம் அடைந்திருக்கின்றனர். கேரளாவின் இந்த அடாவடியை கண்டித்திருக்கும் தமிழக விவசாயிகள், இதேநிலை நீடித்தால் ​​கேரளாவோடு சட்ட விரோதமாகச் சேர்க்கப்பட்ட தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை ஆகிய 3 தாலுகாக்களையும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று ​தேனி​,​ திண்டுக்கல்​,​ மதுரை​,​ சிவகங்கை​,​ ராமநாதபுரம்​,​ விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருக்கும் அனைத்து பஞ்சாயத்துகளும்​ தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கடிதம் அனுப்புவோம்​ என்று தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழக விவசாயிகளின் கண்ணீருக்கு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ… ​


Share it if you like it