ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கொலை: தீயணைப்புப் படை வீரர் கைது!

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கொலை: தீயணைப்புப் படை வீரர் கைது!

Share it if you like it

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், அம்மாநிலத்தைச் சேர்ந்த தீயணைப்புப் படை வீரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலத்தில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை தொடர்ந்து கொலை செய்து வருகின்றனர். பதிலுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் மேற்கண்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களை கொலை செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் பாலக்காட்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சஞ்சித் என்பவர், டூவீலரில் சென்றபோது, அவர் மீது காரை மோதி நிலைகுலையச் செய்து வெட்டிக் கொலை செய்தனர் எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள். இதற்கு பழிக்குப்பழியாக அதே ஆண்டு டிசம்பர் மாதம் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த கே.எஸ்.ஷான் என்பவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வெட்டிக் கொலை செய்தனர்.

இதையடுத்து, ஷான் கொல்லப்பட்ட அடுத்த 12 மணி நேரத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநிலச் செயலாளர் ரஞ்சித் ஸ்ரீநிவாசன் என்பவரை எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எஃப்.ஐ. அமைப்பினர் வெட்டிக் கொலை செய்தனர். இப்படி மாறி மாறி கொலை நடந்ததால் போலீஸ் கடும் கெடுபிடி காட்டியது. இதனால், இரு தரப்பினரும் சில மாதங்கள் அமைதியாக இருந்தனர். இந்த சூழலில், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி பாலக்காட்டில் தந்தையுடன் அதிகாலை தொழுகைக்குச் சென்று விட்டு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த சுபைர் என்பவர் மீது காரை மோதி, சஞ்சித்தை கொலை செய்தது போலவே கொலை செய்தனர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். இதற்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, அடுத்த 24 மணி நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம்களில் உடற்கல்வி பயிற்சியாளராக பணியாற்றி வந்த பாலக்காடு மாவட்டம் மேலமுரியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவரை வெட்டிக் கொலை செய்தனர் எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எஃப்.ஐ. அமைப்பினர்.

தனது டூவீலர் மெக்கானிக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீநிவாசனை, 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சுமார் 20 இடங்களில் சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீநிவாசனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், வழியிலேயே ஸ்ரீநிவாசன் உயிரிழந்து விட்டார். இக்கொலை தொடர்பாக சுமார் 20 பேரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இந்த நிலையில்தான், கேரள மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படையில் பணிபுரியும் ஜிஷாத் என்பவரை அம்மாநில போலீஸார் கைது செய்திருக்கின்றனர். கேரள மாநிலத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் கொலைக்கும் ஜிஷாத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இதில் ஹைலைட் என்னவென்றால், எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு கேரள மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ரகசியமாக பயிற்சி அளித்து வருவதாக சமீபத்தில் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தும் ஜிஷாத்துக்கும் தொடர்பு இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.


Share it if you like it