பெண்கள் நரபலி: போலி மந்திரவாதி முகமது ஷஃபி கைது!

பெண்கள் நரபலி: போலி மந்திரவாதி முகமது ஷஃபி கைது!

Share it if you like it

கேரளாவில் இரு பெண்களை நரபலி கொடுத்த டாக்டர் தம்பதியையும், போலி மந்திரவாதி முகமது ஷஃபியையும் போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் லாட்டரி சீட்டு விற்றுவந்த ரோஸ்லின், பத்மா ஆகிய 2 பெண்களையும் திடீரென காணவில்லை. இதுகுறித்து இருவரின் உறவினர்களும் தனித்தனியாக போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இரு பெண்களின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது, இருவரின் செல்போன்களும் கடைசியாக பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற பகுதியைக் காட்டியது. மேலும், இருவரின் செல்போனிலும் கடைசியாக போலி மந்திரவாதியான முகம்மது ஷஃபி என்பவர் பேசியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் முகமது ஷஃபியை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான், 2 பெண்களையும் முகமது ஷஃபி நரபலி கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது, திருவல்லா பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல் சிங்கும், அவரது மனைவி லைலாவும் கடுமையான கடன் மற்றும் பணப் பிரச்னைகளில் இருந்திருக்கிறார்கள். ஆகவே, இப்பிரச்னைகளில் இருந்து விடுபடவும், பணக்காரர்களாக மாறுவதற்கும் வழி தேடி போலி மந்திரவாதி முகமது ஷஃபியை நாடியிருக்கிறார்ள். அப்போது, 2 பெண்களை நரபலி கொடுத்தால் நிறைய செல்வம் கிடைக்கும் என்று முகமது ஷஃபி கூறியிருக்கிறார்.

இதற்கு பகவல்சிங் சம்மதம் தெரிவிக்கவே, நரபலிக்கான பெண்களே தானே அழைத்து வருவதாகவும், அதற்கான பணத்தை மட்டும் கொடுக்குமாறும் முகமது ஷஃபி கூறியிருக்கிறார். அதன்படி, பகவல்சிங்கும் பணம் கொடுத்திருக்கிறார். பின்னர், லாட்டரி சீட்டு விற்பனையில் தனக்கு ஏற்கெனவே அறிமுகமாகி இருந்த ரோஸ்லின், பத்மா ஆகியோரிடம், ஒருவர் வீட்டில் நடக்கும் பூஜையில் கலந்துகொண்டால் பணம் கொடுப்பதாக முகமது ஷஃபி கூறியிருக்கிறார். எனவே, பகவல் சிங் வீட்டில் நடந்த பூஜைக்கு இருவரும் வந்திருக்கிறார்கள். ஆனால், நள்ளிரவில் நடந்த பூஜையின்போது இரு பெண்களின் கழுத்தையும் அறுத்து கொலை செய்து நரபலி கொடுத்திருக்கிறார்கள்.

இதன் பிறகு, இரு பெண்களின் உடல்களையும் மருத்துவர் பகவல் சிங்கின் வீட்டின் அருகிலுள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்த விவரத்தை முகமது ஷஃபி கூயிருக்கிறார். இதைத் தொடர்ந்து, ஆயுர்வேத மருத்துவர் பகவல் சிங், அவரது மனைவி லைலா, போலி மந்திரவாதி முகம்மது ஷஃபி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், இரு பெண்களும் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவர்களது உடல்களை தோண்டி எடுத்து, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண்களில் பத்மா, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். லாட்டரி தொழிலுக்காக கேரளா சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it