‘கிடுகு’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.
ராமலட்சுமி புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் வீர முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கிடுகு – சங்கிகளின் கூட்டம்”. இத்திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் இணையத்தில் வெளியாகி, சக்கைப்போடு போட்டது. இத்திரைப்படத்தில் தி.மு.க. மற்றும் திராவிட இயக்கங்களின் தில்லுமுல்லுகளை தோலுரித்துக் காட்டும் வகையில், பல்வேறு காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, முரசொலி நாளிதழ் அலுவலக மூலப்பத்திரம் தொடர்பான சர்ச்சை கடந்தாண்டு எழுந்தது நினைவிருக்கலாம். இதை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், இத்திரைப்படத்தில் ‘அவன்கிட்ட மொதல்ல மூலப்பத்திரத்தை காட்டச் சொல்லுங்க சார்’ என்று ஒரு பெண் கேட்பதுபோல வசனம் இடம்பெற்றிருக்கிறது.
அதேபோல, திராவிடர் கழகத்தினரின் தாலி அறுப்பு போராட்டத்தை மையப்படுத்தி, ‘இவன் ஜாதியை ஒழிக்கிறேன்னு சொல்லி, எம் பொண்ணுக்கு தாலி கட்டுவான். அப்புறம், மூடநம்பிக்கையை ஒழிக்கிறேன்னு சொல்லி நடுரோட்டுல வச்சு தாலிய அறுப்பான் சார்’ என்று ஒரு பெண்ணின் தாய் பேசுவதுபோல வசனம் இடம்பெற்றிருக்கிறது. மேலும், ‘நீ சங்கியா, பச்சைத் தமிழனான்னு எனக்குத் தெரியாது. ஆனா, நான் பச்சை திராவிடன்’ என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுவதுபோல காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, ‘சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் சிலை எதற்கு என்று சட்டசபையில் சொல்லுற உங்க திராவிட அரசியல், இந்தியாவுக்கு சுதந்திரமே வேணாம்னு சொன்ன ஈரோடு ராமசாமிக்கு சிலை வைக்கச் சொல்லுதே எதுக்கு’ என்று கேட்கும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது.
இதுபோன்ற காட்சிகள்தான் திராவிடர்களையும், தி.மு.க.வினரையும் வெறுப்பேற்றி இருக்கிறது. உடனே களத்தில் குதித்த திராவிடர்களும், தி.மு.க.வினரும் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டார்கள். இப்படத்தை திரைக்கு வரவிடக் கூடாது என்று சமூக வலைத்தளங்களில் கம்பு சுற்றினார்கள். இந்த சூழலில்தான், கிடுகு திரைப்பட்டதை தடை செய்யக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தினர். இதுகுறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி கூறுகையில், “கிடுகு – சங்கிகளில் கூட்டம்” என்ற திரைப்படத்தில் தி.மு.க. அரசையும், தந்தை பெரியாரையும் அவதூறாக சித்தரித்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இத்திரைப்படம் வெளியானால் தமிழகத்தில் ஜாதி, மத மோதல்கள் ஏற்பட்டு அமைதி சீர்குலையும். எனவே, திரைப்படத்தை தடை செய்யக்கோரி புகார் அளித்தோம்” என்றார்.