பொதுமக்களை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர்: வைரலாகும் வீடியோ!

பொதுமக்களை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர்: வைரலாகும் வீடியோ!

Share it if you like it

கோவை அருகே தரமற்ற சாலை அமைத்ததை தட்டிக் கேட்ட பொதுமக்களா, தி.மு.க. கவுன்சிலர் தாக்கி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்து அமைந்திருக்கிறது கொண்டையம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி கார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 6.31 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலையை அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் மோகன், கான்ட்ராக்ட் எடுத்து செய்திருக்கிறார். ஆனால், வழக்கமாக தி.மு.க.வினர் அமைக்கும் சாலை போல இந்த சாலையும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு லட்சுமி கார்டன் பகுதியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 9-வது வார்டு கவுன்சிலர் தி.மு.க.வைச் சேர்ந்த மோகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார், கார்த்திக், ஜீவா உள்ளிட்டோர் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், பொதுமக்களும் இவர்களுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பினர். இதனால் கவுன்சிலர் மோகன் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், கேள்வி எழுப்பிய பொதுமக்களை தி.மு.க. கவுன்சிலர் மோகன் சரமாரியாக தாக்கத் தொடங்கினார். இந்த தாக்குதலில் கேள்வி எழுப்பிய ரவிக்குமார், கார்த்திக், ஜீவா ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். இவர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தரமற்ற முறையில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களை, தி.மு.க. கவுன்சிலர் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், தி.மு.க. கவுன்சிலர் மோகன், பொதுமக்களை தாக்குவதை லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க.வினரின் அராஜகத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it