நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை, தி.மு.க. கவுன்சிலர்கள் தங்களது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துவது அம்பலமாகி இருக்கிறது. கோவையில் கவுன்சிலர் ஒருவர், தூய்மைப் பணியாளரை தனது ஜீப்பை சுத்தம் செய்ய வைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களை, தி.மு.க.வைச் சேர்ந்த மேயர், தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் சிலர் தங்களது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால், இதை அதிகாரிகள் உட்பட யாரும் கண்டுகொள்வதில்லை. அதேசமயம், தி.மு.க.வினரால் தாங்கள் படும் துன்பங்கள் குறித்து துப்புரவு பணியாளர்கள் குமுறி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், தி.மு.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், தூய்மைப் பணியாளர்களை தங்களது சொந்த வேலைக்கு பயன்படுத்துவது அம்பலமாகி இருக்கிறது. கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சி 26-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கோமதி. இவரது தந்தையின் வாகனத்தைத்தான் நகராட்சி தூய்மைப் பணியாளரை வைத்து சுத்தம் செய்ய வைத்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க.வினரின் அராஜகத்தை கண்டித்து வருகின்றனர்.