கோவையில் அனுமதி இன்றி இயங்கிவந்த கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில குவாரிகள் மட்டுமே அரசிடம் உரிமம் பெற்று விதிமுறைப்படி இயங்குகின்றன. மற்றவை உரிமம் இல்லாமலும், விதிமுறைகளை பின்பற்றாமலும் இயங்கி வருகின்றன. ஆகவே, அனுமதி இல்லாமல் இயங்கும் கல்குவாரிகள் குறித்த செய்தி சேகரிப்பதற்காக தனியார் தொலைக்காட்சி நிருபரும், ஒளிப்பதிவாளரும் கிணத்துக்கடவு அருகே சென்றனர். அப்போது, தனியார் நிலத்தில் புகுந்து எப்படி படம் பிடிக்கலாம் என்று கேட்டு, அங்கிருந்த 3 பேர் கேமராவை பறிக்க முயற்சி செய்ததோடு, ஒளிப்பதிவாளர் பாலாஜியை தாக்கினர்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இத்தாக்குதலுக்கு அரசியல் கட்சிகள், பத்திரிகையாளர் மன்றங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்ததோடு, கோவை பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் மனு அளித்தனர். இதுகுறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டரும் எஸ்.பி.க்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, பாலாஜி மீது தாக்குதல் நடத்திய கல்குவாரி உரிமையாளர் சிவப்பிரகாஷ், அவரது உறவினர்கள் உதயகுமார், முத்துகுமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சியில் கனிம வளங்கள் கடுமையாக கொள்ளையடிக்கப்பட்டு வருவதை இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.