கோவை மாவட்டத்தில் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் போட்டோவை தி.மு.க. கவுன்சிலர்கள் அகற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து, 22-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அனைத்து மாநகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியதோடு, அதிகளவிலான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளையும் கைப்பற்றியது. அந்த வகையில், பேரூராட்சிளை பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் பேரூராட்சியை மட்டுமே அ.தி.மு.க. கைப்பற்றியது. மற்ற அனைத்து பேரூராட்சிகளையும் தி.மு.க.வே கைப்பற்றியது. இப்பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அ.தி.மு.க.வும், 6 இடங்களில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் சுயேட்சையும் வெற்றி பெற்றன. இதில் சுயேட்சை கவுன்சிலரான கனகராஜ் தி.மு.க.வில் இணைந்தார். இதனால், தி.மு.க.வின் பலம் 7 ஆக அதிகரித்தது. எனினும், பெரும்பான்மை பலம் கிடைக்காததால், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவர் பேரூராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்த பா.ஜ.க.வினர் பேரூராட்சி செயல் அலுவலர் அறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் போட்டோவை மாட்டினர். தகவலறிந்த தி.மு.க.வினர் விரைந்து வந்து மோடியின் படத்தை அகற்றுமாறு கூறினர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்த கூச்சல் குழப்பத்துக்கு இடையே தி.மு.க. கவுன்சிலரான கனகராஜும், மற்றொரு கவுன்சிலரும் சேரந்து பேரூராட்சி செயல் அலுவலர் அறையில் மாட்டப்பட்டிருந்த மோடியின் படத்தை அகற்றினர். மேலும், பேரூராட்சி அலுவலகத்தில் எந்த அனுமதியும் இல்லாமல் எப்படி பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்கலாம்? என்றும் கேள்வி எழுப்பியவர்கள், அனுமதி பெற்று பிரதமர் மோடியின் படத்தை வைத்துக் கொள்ளுமாறு கூறினார்கள்.
அதற்கு பா.ஜ.க.வினரோ, பேரூராட்சித் தலைவரின் அனுமதியுடன்தான் மோடியின் போட்டோவை வைத்ததாக கூறினார்கள். இதுபற்றி தி.மு.க.வினர் பேரூராட்சி தலைவர் மருதாச்சலத்திடம் கேட்டதற்கு, அவர் முறையாக பதிலளிக்கவில்லை. இதனிடையே, பிரதமர் மோடியின் போட்டோ அகற்றப்பட்டது குறித்து தகவலறிந்த பா.ஜ.க.வினர் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பிறகு, பேரூராட்சி செயல் அலுவலர் அனுமதியுடன்தான் பிரதமர் மோடியின் போட்டோவை வைத்ததாக கூறிய பா.ஜ.க.வினர், அத்துமீறி மோடியின் போட்டோவை அகற்றிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தி.மு.க.வினர் மீது போத்தனூர் காவல் நிலையத்திலும் புகார் செய்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.