நாடகங்கள் மூலம் நாட்டை காத்த வீரர் கிருஷ்ண ஸ்வாமி பாவலர்

நாடகங்கள் மூலம் நாட்டை காத்த வீரர் கிருஷ்ண ஸ்வாமி பாவலர்

Share it if you like it

1890 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி அன்று பிறந்த கிருஷ்ணசாமி பாவலர், சிறு வயதிலிருந்தே கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார். சமஸ்கிருதம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழிகளை கற்றுத் தேர்ந்தார். தந்தை பொன்னுசாமியைப் போலவே, இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். எந்தத் தலைப்பிலும் கவிதை இயற்றுவதில் வல்லவராக திகழ்ந்தார். கிருஷ்ணசாமியின் இளைய சகோதரர் மிகவும் பெருமைக்குரிய தமிழ் அறிஞர் T.P. மீனாட்சி சுந்தரம்  அவர்கள்.

சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள முத்தியால்பேட்டை ஆண்கள் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்த கிருஷ்ணசாமி பாவலர், 1917 ஆம் ஆண்டு அன்னிபெசன்ட் அம்மையாரை, ஆங்கிலேயப் போலீசார் கைது செய்த உடன்,  வேலையை ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், T.V. கல்யாணசுந்தர முதலியார், C.R. விஜயராகவாச்சாரியார் உடன் நெருங்கி பழகினார்.

“பாவலர் பாய்ஸ்” என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பித்து, “கதரின் வெற்றி”, “தேசியக் கொடி”, “பதிபக்தி” என இந்திய சுதந்திரப் போராட்டத்தை வலியுறுத்தி, பல நாடகங்களை இயற்றி, மக்களிடைய தேசபக்தியை வளர்த்தார்.

“கதரின் வெற்றி” என்ற நாடகத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. தேசபக்தர்களை போலீசார் அடிப்பது போன்ற காட்சிகளுக்கு, போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், பொது மேடைகளில் நாடகம் போட அனுமதி அளிக்கவில்லை. அதனால், அந்த நாடகத்தின் பெயரை “கதர் பக்தி” என மாற்றி, பல இடங்களில் போட்டு,  பொது மக்களிடையே தேசிய உணர்ச்சிகளை ஊட்டினார். “தேசியக் கொடி” என்ற நாடகம், நாக்பூரில் நடந்த கலவரத்தை மையமாக கொண்டு இயற்றப் பட்டது. அதற்கும் போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனினும், பல எதிர்ப்புகளுக்கு இடையே அரங்கேற்றம் செய்யப் பட்டது.

குடிப்பழக்கம், சூதாட்டம், போன்ற தீய பழக்கங்களை நிறுத்தக் கோரி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த “மதுரை பாய்ஸ் கம்பெனி” தயாரிப்பில், “பதிபக்தி” என்ற நாடகத்தை அரங்கேற்றினார். பின்னர், அது திரைப்படமாகவும் வெளி வந்தது. அதில் அறிமுகமான பலர் பின்னாளில் மிகுந்த பிரபலங்களாயினர். அதில் குறிப்பிடத் தக்கவர்கள் பிரபல நடிகரான எம்.ஜி.ஆர்.,  பிரபல எழுத்தாளர் எஸ். எஸ். வாசன், பிரபல இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன், பிரபல நடிகர்களான டி.எஸ். பாலையா, எம். ஆர். ராதா, என் எஸ் கிருஷ்ணன் போன்றோர்.

“பஞ்சாப் கேசரி” என்ற நாடகத்தை அன்றைய மதராஸ் மாகாணம் முழுவதும் நடத்தியதுடன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற அயல் நாடுகளிலும் நடத்தினார். பின்னர், பி.யு. சின்னப்பா நடிப்பில், அது திரைப் படமாகவும் வெளி வந்தது. படத்தின் தொடக்கக் காட்சியில், “வந்தே மாதரம்” என்ற பாடலுடன் படம் தொடங்கியது. தமிழர்கள் பெருமளவில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள, அப்பாடல், எழுச்சி ஊட்டியது.

பாவலரின் மற்றொரு நாடகமான “பாம்பே மெயிலில்” கதாநாயகன், அன்றைய காங்கிரஸ் கொடியை ஏந்தி, “பாரத மணிக்கொடி வாழ்க” என்ற பாடலுடன் தொடங்கியது. பாடல்களை தேசிய உணர்வுடன், மகாத்மா காந்தியின் சக்கரத்துடன், கதாநாயகன் பாடுவது போல், நாடகம் அமைக்கப்பட்டு இருந்தது.

கிருஷ்ணசாமி பாவலர் சிறந்த இலக்கியவாதி. முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டு பல பாடல்கள் பாடியுள்ளார். அதில் குறிப்பிடத் தக்கவை “போரூர் முருகன் அபிஷேக மாலை”, “கந்தர் கவசம்”, “திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி பதிகம்”,  “வேம்படி விநாயகர் பஞ்சரத்தினம்” போன்றவை. சிந்தாதரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு பழனி ஆண்டவரை தானமாக வழங்கினார்.

அந்த காலத்தில் பலர் சூழ்ந்திருக்க, நூறு கேள்விகள் கேட்பார்கள். ஒருவர் அமர்ந்து பதில் சொல்வார், அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளிப்பவர் “சதாவதானி” என அழைக்கப்படுவார். அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் அளித்ததால், கிருஷ்ணசாமி பாவலர்,  “சதாவதானம் கிருஷ்ணசாமி பாவலர்” என அழைக்கப் பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். வார இதழான “தேசபந்து”, மாத இதழான “பாரதி” காங்கிரஸ் நாளிதழான “இன்றைய சமாச்சாரம்” போன்ற பல பத்திரிகைகளில் பணி புரிந்தார்.

காசநோயால் பாதிக்கப்பட்டு 1934 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். நாடக உலகில், அனைவருக்கும் தெரிந்த முகமாக, கிருஷ்ணசாமி பாவலர் இன்றளவும் உள்ளார்.

அ. சுபதீஸ்வரி


Share it if you like it