கும்பகோணம் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வெளி மாநிலத்தைச் சேர்ந்த சபீர் அலியை போலீஸார் கைது செய்தனர். மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாச்சியார்கோயில் அருகே ஏனநல்லூரைச் சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி செல்வி. இருவரும் மாத்தூரில் செங்கல்சூளை நடத்தி வருகிறார்கள். கடந்த 7-ம் தேதி மாலை இருவரும் தனித்தனி இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பி இருக்கிறார்கள். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், செல்வி அணிந்திருந்த 3 பவுன் தங்கத் தாலி சங்கிலியை பறிக்க முயன்றிருக்கிறார்கள். செல்வி சங்கிலியை விடாமல் பிடித்து கொண்டு கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைப் பார்த்த 2 பேரும் தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து நாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் விசாரித்து வந்த நிலையில், கும்பகோணம் அரசு மருத்துவனை வளாகத்தில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தார். அந்த நபரிடம் போலீஸார் விசாரணை செய்தபோது, அவர் மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சமீம் அலி மகன் சபீர் அலி என்பது தெரியவந்தது. பின்னர், அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சபீர் அலியும், மற்றொரு நபரும் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் பெங்களூருவிலிருந்து வந்து துணி வியாபாரம் செய்வதும், மாலை நேரத்தில் தனியாகச் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பதும் தெரியவந்தது.
மேலும், செல்வியிடம் தாலிச் சங்கிலி பறிக்க முயன்ற சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் சபீர் அலியை கைது செய்து கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், அவனிடமிருந்த இரு சக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.