நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் லியோ படத்தில் இடம்பெற்றிருக்கும் நா ரெடி பாடல் போதை பழக்கத்தை ஊக்குவிப்பதுபோல் இருப்பதாக போலீஸ் கமிஷனருக்கு சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அனுப்பி இருக்கிறார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் லியோ. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. விஜய்யின் பிறந்தநாளையொட்டி, இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘நான் ரெடி’ பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்பாடலை விஷ்ணு என்பவர் எழுதி இருக்கிறார். இந்தப் பாடலில் விஜய் வாயில் சிகரெட் வைத்திருப்பது போன்ற போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும், “நான் ரெடி தான் வரவா, அண்ணன் நான் இறங்கி வரவா, தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா, எவன் தடுத்தும் என் ரூட்டு மாறாதப்பா, எல்லா ப்ளூ பிரிண்டும் தெரியும், மிஷன் சக்ஸஸ்ஃபுல்லா முடியும், கத்தி பல கத்தி இங்க என்ன குத்த காத்திருக்கு, அது தான் கணக்கு, ஏ பத்தாது பாட்டில் நா குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க, சியர்ஸ் கெடா வெட்டி கொண்டாங்கடா என் பசி நான் தணிக்க… மில்லி உள்ள போனா போதும் கில்லி வெள்ள வருவான் டா மில்லி உள்ள போனா போதும் கில்லி வெள்ள வருவான் பார்” என்று பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த பாடல் வெளியானதும், அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, “இதுமாதிரியான கீழ்த்தரமான வரிகளை பாட விஜய்க்கு எப்படி மனசு வந்துச்சு. பொறுக்கித்தனமான பாட்டு, இதெல்லாம் ஒரு பாடலா? எத பாடுறோம்னு கூட தெரியலேன்னா என்ன மண்ணாங்கட்டிக்கு நீங்க பொதுநலம் குறித்து இந்த மாணவர்களுக்கெல்லாம் விருது கொடுக்குறீங்க. சமூக சேவை செய்து நீங்கள் மக்களை ஏமாற்றியது போதும். சிகரெட்டை புரமோஷன் பண்ண விஜய் எத்தனை கோடி வாங்குனாருன்னு இந்த இளைஞர்களுக்கு தெரியுமா? என்று சரமாரியாக விஜய்யை சாடியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம், சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இப்பாடலில் போதை பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடித்திருப்பதாக ஆன்லைன் மூலமாக சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் அளித்திருக்கிறார். மேலும், அப்புகாரில் தமிழக முதல்வர் சமீபத்தில் போதை பொருளை ஆதரிக்கும் வகையிலும், போதை பொருட்களை தடுப்பதில் கடமை தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை பாயும் என்று கூறியிருந்தார். ஆகவே, நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, போதையை ஆதரிக்கும் வகையில் பாடலை வெளியீடு செய்த நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆகவே, இந்த நா ரெடி பாடல் படத்தில் இடம்பெறுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.