முடியட்டும்… தொடரட்டும்…
மேற்கு வங்காளம் என்றாலே, நமது நினைவிற்கு வருவது “இந்து மதப் பெருமைகளை, உலகறிய செய்த சுவாமி விவேகானந்தரும், நமது நாட்டு மக்களுக்கு சுதந்திர வேட்கை ஊட்டிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸும், நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரும், பாரதியாரின் குருவான சகோதரி நிவேதிதையும் மற்றும் பலரும். ஆனால், தற்போது மேற்கு வங்காளம் என்றாலே, அங்கு நடக்கும் படுகொலைத் துயர சம்பவங்களும், வன்முறைகளுமே நமது நினைவிற்கு வருகின்றது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 6, 2021 அன்று, ஒரே கட்டமாக, ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது. ஆனால், மேற்கு வங்காளத்திலோ, 8 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதன் மூலமாகவே சட்டம், ஒழுங்கு எந்த அளவிற்கு அங்கு உள்ளது, என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில், கூச் பிஹார் மாவட்டத்தில், 4 ஆம் கட்ட தேர்தலின் போது, மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. சம்பவத்தில் 4 பேர் கொல்லப் பட்டனர்.
கம்யூனிச பயங்கரவாதம்:
1997 ஆம் ஆண்டு அன்றைய மேற்கு வங்காளம் முதல்வராக இருந்த போது ஜோதிபாசு அவர்கள், சட்டமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது, 1977 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையில், 28,000 அரசியல் படுகொலைகள் நடந்ததாக குறிப்பிட்டார். இதன்படி பார்த்தால், அந்த குறிப்பிட்ட 19 வருடங்களில் மட்டுமே ஆறு மணி நேரத்திற்கு ஒரு அரசியல் படுகொலை நடந்து உள்ளது. சராசரியாக ஒரு மாதத்திற்கு 125.7 அரசியல் படுகொலைகள் நடந்ததாக அறிய முடிகிறது. இதன் மூலம், எந்த அளவிற்கு அங்கு வன்முறை தலை தூக்கி உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
2009 ஆம் ஆண்டு மட்டும் நடை பெற்றவை:
2009 ஆம் ஆண்டு, மேற்கு வங்காளம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விபரம் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மரணம் – 2284
அரசியல் படுகொலை – 26
பெண்களின் கற்பு பறி போனது – 2516
இந்த அறிக்கையையே, எதிர்க்கட்சிகள் மிகவும் தவறான முறையில் தயாரிக்கப் பட்டது என சுட்டிக் காட்டியது. 19 வருடத்தில் நடைபெற்ற அரசியல் படுகொலையை கணக்கிட்டு பார்க்கும் போது, 1997 ஆம் வருடத்தில், 1473 என இருக்க வேண்டும் என எதிர் கட்சிகள் கூறியது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கூறியதாவது, 1977 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை 25 ஆயிரம் பேர் கொல்லப் பட்டதாகவும், அதில் 12 ஆயிரம் பேர் அரசியல் படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் என குறிப்பிட்டு உள்ளார்.
முன்னாள் பாரத பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்கள், “கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் வாழ்வதே, மிகவும் பாதுகாப்பற்றது எனவும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஊர்” எனவும் குறிப்பிட்டார். மேலும், அங்கே நடக்கும் வன்முறையை கண்ட காங்கிரஸ் கட்சியினர், மேற்கு வங்காளத்தில் குடியரசு ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் , 1989 ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தனர்.
1996, 1997, 1998 காலகட்டத்தில், அரசியல் காரணங்களுக்காக, தங்களுடைய உடல் உறுப்புகளை இழந்தவர்களை, டெல்லிக்கு அழைத்து வந்து, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், மம்தா பேனர்ஜி, கம்யூனிஸ அராஜகத்தை, உலகம் அறியச் செய்தார்.
மம்தா ஆட்சியில் நடைபெறும் வன்முறை:
2011 ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மம்தா பானர்ஜி ஆட்சியிலும் வன்முறை தலை தூக்கியது.
கிராமங்களில் வீடுகளின் வாசல் தோறும், கட்சிக் கொடி இடம் பெற்று இருக்கும். கம்யூனிஸ்ட் கொடி இருந்தால், அந்த குடும்பம் கம்யூனிஸ்ட் குடும்பம் எனவும், திரிணாமுல் காங்கிரஸ் கொடி இருந்தால், அந்த குடும்பம் திரிணாமுல் குடும்பம் எனவும் அடையாளம் கொள்ளும் வகையில், அனைத்து வீடுகளிலும் கட்சிக் கொடி இருக்கும்.
2018 ஆம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் வேட்புமனுவை கூட தாக்கல் செய்ய விடாமல் தடுத்தனர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர். இதனால் எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஒன்றிணைந்து பஞ்சாயத்து தேர்தலில், வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். அந்த அளவிற்கு, வன்முறை அங்கு, தலை தூக்கியது.
அப்போதைய பஞ்சாயத்து தேர்தலில், 34 சதவீத இடங்களில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை எதிர்த்து, யாரும் நிற்கவில்லை. அந்த அளவிற்கு பயமுறுத்தி, மற்றவர்களை தேர்தலில் போட்டியிட விடாமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்றனர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.
2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 42 தொகுதியில், பாஜக 18 தொகுதியில் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடந்த வன்முறை வெறியாட்டத்தில், 11 ஆண்களும், 2 வயது குழந்தையும் படுகொலை செய்யப் பட்டனர். பாஜக கட்சியினர், 130 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர் என கூறினர்.
2021 நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்:
கொல்கத்தா மாநகராட்சி ஓய்வுபெற்ற கமிஷனர் கௌதம் சக்கரவர்த்தி அவர்கள், தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்து இருந்தார். அதில், வாக்கு அளிக்க வரும் வாக்காளர்களை பயமுறுத்துவதற்காக துப்பாக்கிகளும் குண்டுகளும் பயன்படுத்தப் படுகின்றது எனவும், இதற்கு பயந்து வாக்காளர்கள் தங்களுடைய வாக்கை செலுத்த, வீட்டை விட்டு வர பயப்படுகிறார்கள் எனவும், கூறி இருந்தார். கொல்கத்தா போலீசார், தவறு செய்பவர்களை கண்டு பிடித்து, அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும், எனவும் கூறி இருந்தார்.
இஸ்லாமியர்களை கவர்வதற்காக, இஸ்லாமியர்கள் அனைவரும், திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி, தேர்தல் பிரச்சாரத்தின் போது அறைகூவல் விடுத்தார். இதனால் கோபம் அடைந்த தேர்தல் ஆணையம், மம்தா பானர்ஜிக்கு ஏப்ரல் 12 இரவு 8 மணி முதல் ஏப்ரல் 13 இரவு 8 மணி வரை என, இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு, தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்தது.
திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்னரும் தொடரும் வன்முறை :
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள், மேற்கு வங்காளத்தில் நடைபெறும் வன்முறையை மிகக் கடுமையாக கண்டித்து உள்ளார். கொரோனா நிவாரணப் பணிகளில், கவனம் செலுத்தாமல், வன்முறை செய்கிறது எனவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சிபிஎம் அலுவலகங்களை தீ வைத்து கொளுத்தும் செயலில் ஈடுபடுவதாகவும், மம்தா பானர்ஜியை கடுமையாக கண்டித்து உள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள், தேர்தல் முடிவு வந்த பிறகு, 14 பாஜகவினர் கொல்லப் பட்டதாகவும், ஒரு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி விட்டதாகவும், பெண்கள், குழந்தைகள் கடும் துயரத்திற்கு ஆளாக்கப் பட்டதாகவும், பாஜகவினரை தேடித் தேடி கண்டு பிடித்து அடித்து துன்புறுத்துகிறார்கள் எனவும், தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்காள மாநில அரசை, கலவரம் சம்பந்தமாக, விரிவான அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. ஆனால், மாநில அரசு இதுவரை எந்த அறிக்கையும் அனுப்பவில்லை. உள்துறை அமைச்சகம் நினைவூட்டியும், எந்த கடிதமும் அனுப்பாமல் மாநில அரசு காலத்தாமதம் செய்து வருகின்றது.
மேற்கு வங்காள சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து, விரிவான அறிக்கை அனுப்பி வைக்குமாறு, மாநில ஆளுநர் ஜெகதீப் தாங்கர் கேட்டுக் கொண்டார். அதற்கும் எந்தவித அறிக்கையும் அனுப்பாமல், ஆளுநருக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் செவி சாய்க்காமல் நடந்து கொள்ளும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து எதிர் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
பாஜக ஆளும் மாநிலத்தில், ஏதோ ஒரு பிரச்சினை என்றால், உலக தொலைக்காட்சிகள் அனைத்தும் விவாதம் செய்கின்றனவே!
மேற்கு வங்காளத்தில் கொல்லப்படும் அப்பாவி எளிய மக்களுக்காக, இதுவரை, தமிழக தொலைக் காட்சிகள் ஏதாவது விவாதம் செய்து இருக்கின்றதா?
மற்ற அரசியல் கட்சிகள் ஏதேனும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றதா?
அசாம் மாநில அமைச்சர் ஹிமாந்த பிஷ்வா சர்மா அவர்கள், மேற்கு வங்காளத்தில், தேர்தல் முடிவுகள் வெளி வந்த பின்னர், பலர் அசாம் நோக்கி வருகிறார்கள் எனவும், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும், பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப் பட்டு இருப்பதாகவும், மம்தா ஆட்சியில், பாஜகவினர் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள் எனவும், தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா அவர்களும், மேற்கு வங்காளத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும், அதனை முடிவுக்கு கொண்டு வர, அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து இருந்தார்.
இது நாள் வரை, வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது போல பேசிய மம்தா அவர்கள், தற்போது வன்முறையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, நிதி உதவியை அறிவித்து உள்ளார்.
வன்முறையால் யாரும் பாதிக்கப் படவில்லை என்றால், அறிவிக்கப் பட்ட நிதியுதவி யாருக்கு வழங்கப் படும்?
எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், பாதிக்கப் படுவது அப்பாவி பொது மக்கள் தானே… அவர்களைக் காக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? மம்தா அவர்கள்.
உண்மையிலேயே நல்ல ஆட்சி தர வேண்டும் என மம்தா அவர்கள் நினைத்தால், எந்தக் கட்சியினராக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு சரியான தண்டணையை வாங்கித் தர முன்வர வேண்டும்…
மக்களாட்சி நடைபெறும் நமது நாட்டில், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அரசு, மக்களின் உயிரைக் குடித்த அந்த கலவரக்காரர்களை, அடையாளம் கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிற்க செய்ய வேண்டும்.
செய்வாரா? என்பதே நமது எதிர்பார்ப்பாக உள்ளது…
இந்த துயர சம்பவம் இத்தோடு முடியட்டும்…!!
இனிமேல் நல்லவையே தொடரட்டும்…!!!
– அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai
ஆதாரம்:
https://www.mainstreamweekly.net/article2234.html