பல மொழி கற்போம்… தமிழ் மொழி காப்போம்…

பல மொழி கற்போம்… தமிழ் மொழி காப்போம்…

Share it if you like it

பல மொழி கற்போம்தமிழ் மொழி காப்போம்

மொழி என்பது அனைவருக்கும் அவசியம். தனது மனதில் இருக்கும் கருத்துக்களை, வெளியே கொண்டு வர மொழி மிகவும் அவசியமானது ஆகும். காக்கை, குருவி, நாய் என எல்லா வகையான விலங்குகளும், பறவைகளும் ஓசையை எழுப்புகின்றன. ஓவ்வொரு உயிரினமும் எழுப்பும், ஓவ்வொரு வகையான ஓசைகளுமே, ஓரே மாதிரியான வகையில் இருப்பது போல, நமக்குத் தோன்றினாலும், அதனுடைய உயிர் இனத்திற்கு, அது ஒரு மொழி. தான் சார்ந்த இனத்திற்கு புரியும் வகையில், தனது கருத்துக்களை, அவை பிரதிபலிக்கும்.

மனிதர்கள் விலங்குகளைப் போல ஒலி எழுப்பாமல், வார்த்தை வடிவில் பேசியும், எழுதியும் தங்களுடையக் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தனது தாய் மொழியை சிறப்பாகக் கற்று, மற்ற மொழிகளையும் கற்றவர்கள், பல்வேறு துறைகளில், பெரும் பங்கு ஆற்றி வருகின்றனர்.

தமிழ் மொழி பற்று :

தமிழர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ, அங்கு உள்ள மொழியை கற்றுக் கொண்டு, தமிழ் மொழி மீது கொண்ட பற்றால், தமிழ் மொழியை தனது அடுத்த தலைமுறைக்கு பயிற்றுவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் பேசும் தமிழை விட, மற்ற ஊரில் இருக்கும் தமிழர்கள் பேசும் தமிழ் மொழி, மிக சுத்தமாகவும், சிறப்பாகவும், வேறு மொழிகளைத் துளியும் கலக்காமல் பேசி வருவதாக, வரலாற்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

நொபொரு காராசிமா (Noboru Karashima) :

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர், எழுத்தாளர், நொபொரு காராசிமா. தமிழ் மொழி மீது கொண்ட அன்பால், தமிழைக் கற்று தமிழறிஞர் ஆனார். 1995 ஆம் ஆண்டு, தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டை, முன்னின்று நடத்தியதில், முக்கிய பங்கு வகித்தார். இவரது சேவையை பாராட்டி, 2013 ஆம் ஆண்டு, அன்றைய மத்திய அரசு, அவருக்கு பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்தது.

தென்னிந்திய வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி என பல துறைகளில் ஈடுபட்டு, தனது முத்திரையை பதித்தார். ஜப்பான் மொழியைத் தாய் மொழியாக கொண்டு இருந்தாலும், தமிழ் மொழியைக் கற்று, சரளமாக பேசக்கூடிய திறன் பெற்றவர்.

கொரியதமிழ் தொடர்பு :

கொரிய மொழியில், தமிழ் வார்த்தைகள் நிறைய உள்ளன. “புல்” என்ற வார்த்தைக்கு, தமிழ் மொழியில் என்ன அர்த்தமோ, அதே பொருள் தான் கொரிய மொழியிலும் உள்ளன. அது போல நிறைய வார்த்தைகள், தமிழ் மொழியுடன் கொரிய மொழி தொடர்பு உடையதாக உள்ளது.

தமிழ் மொழிக்கும் – கொரிய மொழிக்கும், பல  ஆயிரம் வருடங்களாகவே, தொடர்பு இருந்து வருவதாக, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ்இந்தி தொடர்பு :

தமிழ் மொழியிலும், இந்தி மொழியிலும் நிறைய வார்த்தைகள், ஒரே அர்த்தத்தில் கூறப் பட்டு வருகின்றன. இந்தி மொழியில் “அனுபவ்” என்பது, தமிழ் மொழியில் “அனுபவம்” என ஆகின்றது. இந்தியில் “சூர்யா” என்பது தமிழில் “சூரியன்” என ஆகின்றது. இது போல நிறைய வார்த்தைகள்,  அன்றாட உரையாடல்களில், உபயோகப் படுத்தப் படுகின்றது.

இந்தி மொழியை கற்க, தமிழர்கள் பலர் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பது இல்லை. அரசுப் பள்ளிகளில், தமிழ் அல்லாத மற்ற மொழிகளும் கற்பிக்கப் படுவது போல, இந்தி மொழி கற்பிக்கப் படுவது இல்லை. அதனால், ஏழை எளிய மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கட்டணம் கொடுத்து, தனியார் பள்ளிகளிலும், தனியார் கல்வி நிறுவனத்திலும், இந்தி மொழியை ஆர்வமாக படித்து வருகின்றனர்.

இந்தி தேர்வு அதிகம் எழுதும் தமிழர்கள் :

மகாத்மா காந்தியால், 1918 ஆம் ஆண்டு, “இந்தி பிரச்சார சபா” தமிழகத்தில் தோற்றுவிக்கப் பட்டது.

2017 ஆம் ஆண்டு மட்டுமே, ஒரு லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் முதல் நிலை இந்தி தேர்வான, “ப்ராத்மிக்” தேர்வை எழுதினார்கள்.

சென்னையில் மட்டும் 220 தேர்வு நிலையங்கள் இருந்தன. தமிழகத்தின்,  மற்ற ஊர்களில் 158 தேர்வு நிலையங்கள் இருந்தன. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா என நான்கு மாநிலங்களில் மட்டுமே 3,787 இந்தி ஆசிரியர்கள் உள்ளனர் எனவும், தமிழகத்தில் மட்டுமே 10 ஆயிரத்து 709 இந்தி ஆசிரியர்கள் உள்ளனர் எனவும், 2017 ஆம் ஆண்டின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற நான்கு மாநிலங்களிலும் இருந்ததை விட, சென்னையில் மட்டுமே அதிகமான இந்தி ஆசிரியர்கள் உள்ளனர். சென்னையில் மட்டுமே 4,678 ஆசிரியர்கள் இருந்தனர். மற்ற நான்கு மாநிலங்களையும் சேர்த்து மூன்று ஆயிரத்து 787 இந்தி ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர்.

1927 ஆம் ஆண்டு, “பெரியார்” என அழைக்கப் படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், ஈரோட்டில் உள்ள தன்னுடைய வீடு ஒன்றை, இந்தி மொழி பயிற்சிக் கல்லூரிக்கு தானமாக அளித்தார்.

https://www.thehindu.com/news/cities/chennai/tn-has-highest-number-of-hindi-students/article24787677.ece

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் :

கர்நாடகாவில் வாழும் தமிழர்கள், தமிழுடன் கன்னட மொழியையும் பேசி வருகின்றனர். ஆந்திராவில் வாழும் தமிழர்கள், தமிழ் மொழியுடன் தெலுங்கு மொழியையும் பேசி வருகின்றனர். தில்லியில் வாழும் தமிழர்கள், தமிழுடன் இந்தி மொழியையும் பேசி வருகின்றனர். அதுபோல உலகமெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்கள், தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதுடன், அந்த ஊரில் உள்ள மாநில மொழியையும், விருப்பப் பட்டு கற்றுக் கொண்டு வருகின்றனர்.

நமது நாட்டில், எல்லா மாநிலங்களிலும், பல மொழிகள் பயிற்றுவிக்கப் பட்டும், பேசப் மட்டும் வருகின்கிறது. தாய் மொழியில் இல்லாமல், மற்ற மொழிகளில் பேசுவதால், அந்த மாநில மொழிக்கு உண்டான முக்கியத்துவம் குறைந்து விடும் என சிலர் கூறுவது வேடிக்கையானது.

ஏனெனில், நமது நாட்டில், எல்லா மாநிலங்களிலுமே, அந்த மாநிலத்தின் மொழி மிகவும் சிறப்புடனே வளர்ச்சி பெற்று வருகின்றது.

ஓடியாவில் இந்தி மொழி பேசப் பட்ட போதும், அங்கு “ஓடியா” மொழி சிறப்புடனே இருக்கின்றது. அது போலவே, எல்லா பகுதிகளிலும் பரவலாக இந்தி மொழி பேசப்பட்ட போதும், அந்த மாநில மொழி சிறப்பாகவே இருந்து வருகின்றது.

பல மொழிகளைக் கற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்…” எனப் பாடினார். மற்ற மொழிகளைக் கற்கும் போது தான், தமிழ் மொழியின் சிறப்புகளை, நம்மால் தெரிந்துக் கொள்ள முடியும்.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு”

என்ற வள்ளுவரின் திருக்குறளுக்கு ஏற்ப, நிறைய மொழிகளைப் படித்து, நிறைய கற்று, தமிழின் சிறப்பை உணர்ந்து, நல்ல ஒரு தமிழனாக வாழ்ந்து, நமது இந்தியாவை உயர்த்துவோம்.

பல மொழி கற்போம்… தமிழ் மொழி காப்போம்…

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it