ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வார்கள்
குரு பெளர்ணமி விழாவில் சத்குரு பேச்சு
’புராஜக்ட் சம்ஸ்க்ரிதி’ என்ற திட்டத்தின் மூலம் ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன கலைகளையும், தற்காப்பு கலையான களரியையும் உலகம் முழுவதும் கொண்டு செல்வார்கள் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.
ஆதியோகியான சிவன் முதல் முறையாக சப்த ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பகிர்ந்துகொண்ட தினம் குரு பௌர்ணமி ஆக கொண்டாடப்படுகிறது. இந்தப் புனித நாளில் தான் அவர் உலகின் ஆதிகுருவாக உருவெடுத்தார். இதன் காரணமாக இந்நாள் ஆன்மீக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தாண்டு குரு பௌர்ணமி நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சத்குருவின் சிறப்பு சத்சங்கம் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. அதில் சத்குரு பேசியதாவது:
மனிதர்கள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருப்பதற்கு ஏராளமான சர்க்கஸ் செய்கிறார்கள். துன்பம், இன்பம், கோபம், அமைதி என மனித அனுபவங்கள் அனைத்தும் நமக்குள் இருந்து தான் வருகிறது என்பதை மக்கள் உணராமல் இருக்கிறார்கள். அதனால், வெளி சூழல்களில் ஏராளமான சர்க்கஸ்களை செய்கிறார்கள். இது எந்த பயனையும் தராது. உள்நோக்கி திரும்பினால் தான் நம் வாழ்க்கை அனுபவங்களை மேம்படுத்த முடியும்.
மனிதர்கள் மற்ற உயிரினங்களை போல் உணவு, தூக்கம், காமம் போன்ற வெறும் பிழைப்பு சார்ந்த அம்சங்களில் மட்டும் சிக்கி வாழ்வை வீணடித்துவிட கூடாது. பிழைப்பை தாண்டிய பரிமாணங்களை அவர்கள் அனுபவித்து உணர வேண்டும். இசை, நடனம் போன்றவற்றின் மூலமும் இந்நிலையை நாம் அடைய முடியும்.
ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்கள் பிழைப்பை தாண்டிய கலைகளை கற்று தேர்ந்து இருக்கிறார்கள். சிறுவயதில் இருந்தே இசை, நடனம், களரி போன்றவற்றில் தங்கள் வாழ்வை முதலீடு செய்துள்ளார்கள். இதிலேயே ஊறி வளர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் பொழுது போக்கிற்காக வாரத்தில் 2 மணி நேரம் மட்டும் இதை கற்று கொள்ளவில்லை. 24 மணி நேரமும் இந்த கலைகளுடனே வாழ்ந்து வந்துள்ளார்கள்.
அவர்கள் தாங்கள் கற்ற கலைகளை இப்போது மற்றவர்களுக்கும் கற்று கொடுக்க தயாராகிவிட்டார்கள். அதற்காக, ‘புராஜக்ட் சம்ஸ்க்ரிதி’ என்ற திட்டம் இந்த குரு பெளர்ணமி நாளில் தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் சில வாரங்களில் இணைய வழியில் இசை, நடனம், களரி போன்றவற்றை சொல்லி கொடுக்கும் செயல்களை தொடங்க உள்ளார்கள். பின்னர், உலகின் பல்வேறு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்கள். இதன்மூலம், அவர்கள் நம் இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வார்கள்.
இவ்வாறு சத்குரு பேசினார்.
சத்சங்கத்தின் தொடக்கத்தில் ஈஷா சம்ஸ்க்ரிதி மாணவர்களின் இசை, நடனம் மற்றும் களரி நிகழ்ச்சி நடைபெற்றது.