மதுபான ஊழல் வழக்கு : ஆஜராக மறுக்கும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கைது செய்யப்படுவாரா ?

மதுபான ஊழல் வழக்கு : ஆஜராக மறுக்கும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கைது செய்யப்படுவாரா ?

Share it if you like it

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அப்போதைய தலைமைச் செயலாளர், துணை நிலை ஆளுநரிடம் அறிக்கை அளித்தார். அதன்படி சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் 2, டிசம்பர் 21, கடந்த ஜனவரி 3, 17, பிப்ரவரி 2, 17 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால் 6 சம்மன்களுக்கும் கேஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் டெல்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 17-ம் தேதி நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. அன்றைய தினம் காணொலி வாயிலாக அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அப்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. அவர் பிப்.26-ம் தேதி ஆஜராகும்படி தெரிவித்துள்ளது.

இதனிடையே அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “ஆறு முறை சம்மன் அனுப்பியும் கேஜ்ரிவால் ஆஜராகவில்லை. தற்போது 7-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிதிகளின்படி தொடர்ச்சியாக சம்மன்களை புறக்கணிக்கும் நபரை கைது செய்ய முடியும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியின் முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் இருந்துகொண்டு அரசு தரப்பிலிருந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகமல் இருப்பது மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீதான நம்பிக்கையை குறைக்கும் வகையில் உள்ளது. தவறு செய்திருந்தாலும் செய்யாமல் இருந்தாலும் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து கேள்வி வரும்போது அதற்கு பதிலளிக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Share it if you like it