நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சில கட்சிகள் கூட்டம் சேர வேண்டும் என்பதற்காக மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து திமுக மாநில இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பங்களாமேடு பகுதியில் வேனில் இருந்தபடியே பரப்புரை மேற்கொண்டார். இதற்காக திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளானோர் வந்திருந்தனர். பரப்புரை முடித்து உதயநிதி ஸ்டாலின் பெரியகுளம் புறப்பட்டு சென்ற பிறகு அங்கு வந்த பெண்கள் உள்ளிட்டோருக்கு தலா 200 ரூபாய் விநியோகம் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தல் விதிமுறையை மீறி பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.