முதல் முறையாக தனது வெற்றியை பதிவுசெய்து சென்னையில் மலர்ந்திருக்கிறது தாமரை. அதேசமயம், பொய்ச் செய்தி பரப்பிய தி.மு.க. மற்றும் ஊடகங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில், தோல்வியடைந்ததாக கூறப்பட்ட பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்!
தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் முழுவதுமே அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில், பல்வேறு இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். பல்வேறு இடங்களில் முன்னிலையிலும் இருந்து வருகின்றனர். குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது. அதேபோல, மதுரை, கோவை போன்ற மாநகராட்சிகளில் சில வார்டுகளை பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது.
அந்த வகையில், சென்னை மாநகராட்சியிலும் 200-க்கும் மேற்பட்ட வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து பா.ஜ.க. வேட்பாளர்கள் பலரும் கணிசமான வாக்குகளை பெற்று வந்தனர். அதாவது, அ.தி.மு.க.வைவிட அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருந்து வந்தனர். இவர்களில், 134-வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட உமா ஆனந்தனும் ஒருவர். இவர், மீதான வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு, மாநகராட்சி தேர்தலில் உமா ஆனந்தன் வெறும் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்ததாக, சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தியை பரப்பி விட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், சில ஊடகங்களும் இது உண்மை என்று நம்பி செய்தி வெளியிட்டதுதான். அதோடு, தி.மு.க.வினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் இதை ட்ரெண்ட் ஆக்கியதுதான் ஹைலைட். ஆனால், அப்போதுவரை 134-வது வார்டில் பதிவான வாக்குகள் எண்ணப்படவே இல்லை என்பதுதான் உண்மை.
இந்த நிலையில், பிற்பகலில் 134-வது வார்டு வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், ஆரம்பத்திலிருந்தே உமா ஆனந்தன் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் உமா ஆனந்தன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதற்கான வெற்றிச் சான்றிதழையும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமிருந்து பெற்றார். இதையடுத்து, உமா ஆனந்தன் தோல்வியடைந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மூக்குடை பட்டிருக்கிறார்கள். மேலும், பொய்ச் செய்தி பரப்பிய ஊடகங்களின் முகத்திலும் கரி பூசப்பட்டிருக்கிறது.

