மக்களவைத் தேர்தல் தற்போது நடந்தால், பா.ஜ.க. தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 362 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்திருக்கிறது.
2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மெகா வெற்றியை பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. அதேபோல, இன்னும் 30 முதல் 40 வருடங்களுக்கு பா.ஜ.க.தான் பவர்ஃபுல்லாக இருக்கும் என்று பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட தேர்தல் வியூக வகுப்பாளர்களும், அரசியல் பார்வையாளர்களும் கூறி வருகின்றனர். அந்த வகையில், எதிர்வரும் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.தான் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்பது அனைத்துத் தரப்பினரின் கருத்தாக இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான், ‘இந்தியா டிவி’ என்கிற தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள், ‘நாட்டின் குரல்’ என்கிற பெயரில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில்தான், தற்போதைய சூழ்நிலையில், உடனடியாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி 362 இடங்களில் அமோக வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 97 இடங்களிலும், இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 84 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், மாநிலங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க. ஆளும் உத்தரப் பிரதேசத்தில், மொத்தமுள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 76 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள் தலா 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறார்கள். அதேபோல, முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க கூட்டணி அரசு ஆளும் பீகாரில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
தவிர, சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ.க. கூட்டணி ஆளும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 26 இடங்களில் வெற்றி பெறும் என்றும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு 11 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள். அதேசமயம், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதியில், தி.மு.க. தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 38 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 1 இடம் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு ஒரு இடம் கூடக் கிடைக்காது என்றும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 26 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பா.ஜ.க. கூட்டணிக்கு 14 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் அடுத்ததும் பா.ஜ.க. ஆட்சிதான் என்பது கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்திருக்கிறது.