மக்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, பிரதமரிடமோ, பா.ஜ.க. எம்.பி.க்களிடமோ அல்லது கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்களிடமோ மூக்குடைபடுவது அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.க்கு வாடிக்கை. அந்த வகைியல், தற்போது மக்களவை சபாநாயகரிடம் மூக்குடைபட்டிருக்கிறார் ராகுல்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி உரை மீது 12 மணி நேரமும், பட்ஜெட் மீது 11 மணி நேரமும் விவாதம் நடத்த ராஜ்யசபா அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது. வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் போதெல்லாம் ஜாலியாக வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்த பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்டதுதான் அதிசயம்.
நேற்று மாலை (பிப்.2-ம் தேதி) ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய ராகுல் காந்தி, வழக்கம்போலவே உளறிக் கொட்டி சபாநாயகரிடம் மூக்குடைபட்டார் என்பதுதான் ஹைலைட். அதாவது, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கமலேஷ் பாஸ்வான் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார் ராகுல் காந்தி, உடனே, இடைமறித்து பேச முயன்றார் கமலேஷ் பாஸ்வான்.
ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லாவோ, ‘தற்போது இடைமறித்து பேச வேண்டாம். ராகுல் காந்தி பேசி முடிக்கட்டும். அதன் பிறகு, உங்களுக்கு வாய்ப்புத் தருகிறேன். இப்போது நீங்கள் அமருங்கள்‘ என்று கமலேஷிடம் அமரும்படி கூறினார். அப்போது குறுக்கிட்ட ராகுல், சபாநாயகரைப் பார்த்து ‘நான் ஒரு ஜனநாயகவாதி. ஆகவே, கமலேஷ் பாஸ்வான் பேசுவதற்கு நான் அனுமதி அளிக்கிறேன்’ என்று நக்கலாகக் கூறிவிட்டு அமர்ந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘அனுமதி கொடுக்க நீங்கள் யார்? அதற்கான அதிகாரம் எனக்கு மட்டுமே இருக்கிறது’ என்று காட்டமாக பதிலடி கொடுத்தார். இதனால் முக்குடைபட்ட ராகுல், மீண்டும் பேச்சை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.