இங்கிலாந்தில் அராஜகத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு சரியான பாடம் புகட்டி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் சீக்கியர்களில் ஒரு பிரிவினர் காலிஸ்தான் தனி நாடு வேண்டும் என்று கேட்டு போராடி வருகின்றனர். இந்த காலிஸ்தான் அமைப்புக்கு கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளிப்படையான ஆதரவும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவு அமைப்புகளின் ரகசிய ஆதரவும் இருக்கிறது. இந்த சூழலில், காலிஸ்தானி அமைப்பின் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன் வாலா 1984-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பிறகு, அந்த அமைப்பின் செயல்பாடுகள் தடைபட்டன.
இதனிடையை, காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்கிற அமைப்பை நடிகர் தீப் சித்து தொடங்கி செயல்பட்டு வந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மேற்கண்ட அமைப்பின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட அம்ரித்பால் சிங், தன்னை ஜூனியர் பிந்தரன் வாலை என்று அழைத்து வருகிறார். இந்த சூழலில், சமீபத்தில் அம்ரித் பால் சிங்கின் உதவியாளரை போலீஸார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அம்ரித் பால் சிங், ஆயுதம் தாங்கிய ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார். இதனால், அவரது ஆதரவாளர் விடுவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, கடும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாப் மாநில அரசு, அம்ரித் பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் களமிறங்கியது. அந்த வகையில், அம்ரித் பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 114 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் பிடியிலிருந்து அம்ரித் பால் சிங் எஸ்கேப்பாகி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நேற்று முன்தினம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செயல்படும் இந்திய தூதரகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய காலிஸ்தான் பயங்கரவாதிகள், தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியையும் இறக்கி அகற்றினர்.
இதையடுத்து, மேற்கண்ட சம்பவம் தொடர்பாக டெல்லியில் இருக்கும் இங்கிலாந்து தூதரை நேற்று வரவழைத்து கடும் கண்டனத்தை பதிவு செய்தது மத்திய வெளியுறவு அமைச்சகம். மேலும், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்பாக இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறிழைத்தோர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதன் தொடர்ச்சியாக, காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட தேசியக்கொடி பறக்க விடப்பட்டிருக்கிறது. இந்த போட்டோ மற்றும் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோல, அமெரிக்காவின் சான்பிரான்ஸிகோவில் உள்ள இந்திய தூதரகத்திலும் தேசியக் கொடியை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நேற்று முன்தினம் அகற்றி இருக்கிறார்கள். இதுகுறித்து அமெரிக்க அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.