மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்ற கீதை பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. கொல்கத்தாவின் பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்று பகவத் கீதை ஸ்லோகங்களை பாராயணம் செய்தனர். சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பல்வேறு வயதுடைய பலரும் பாரம்பரிய உடை அணிந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இது தொடர்பாக பாஜகவின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் சுகந்த மஜும்தார் கூறுகையில், ‘பகவத் கீதை என்பது உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய பரிசாகும். பகவத் கீதையை ஓதுவதற்கு மட்டுமல்ல, இந்துக்களை ஒன்றிணைக்கும் நோக்கிலும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்றார்.
“இது பகவத் கீதையின் மெகா ஓதுதல் நிகழ்ச்சி மட்டுமல்ல, இந்துக்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகும். எங்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன, இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்,” என்று அவர் கூறினார். ஹிந்துக்களைப் பிளவுபடுத்த விரும்புவோர் தங்கள் முயற்சியில் தோல்வி அடைவார்கள்’ என்றார். கொல்கத்தாவில் நடைபெற்ற பகவத்கீதை பாராயண நிகழ்ச்சியில் மேற்கு வங்க பாஜக பிரமுகர்களும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதனிடையே, கீதை பாராயண நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து பகவத் கீதையை உச்சரிப்பது சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதுடன் தேசத்தின் வளர்ச்சிப் பயணத்துக்கும் ஊக்கமளிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.