காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ராகுல் காந்தியின் ஆலோசகருமான சாம் பிட்ரோடா, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பரம்பரை வரி (inheritance tax) நடைமுறையில் உள்ளது. அமெரிக்காவைப் போல இந்தியாவிலும் பரம்பரை வரியை கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். பரம்பரை வரியை விளக்கிய பிட்ரோடா, அமெரிக்காவில் ஒரு நபர் இறந்தால் 55% செல்வம் அரசாங்கத்தால் கைப்பற்றப்படுகிறது என்றும், மீதமுள்ளவை மட்டுமே குடும்பத்திற்குச் செல்லும் என்றும் கூறினார். அதாவது காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைந்தால் இதேபோன்ற கொள்கையை கொண்டு வரலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் சத்தீஸ்கரில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மந்திரம் காங்கிரஸ் கி லூட், ஜிந்தகி கே சாத் பீ, ஜிந்தகி கே பாத் பீ என்று அவர் வலியுறுத்தினார். (காங்கிரஸின் கொள்ளை, வாழ்வின் போதும், இறந்த பின்பும்.) என்று கூறினார். ( அதாவது காங்கிரஸ் கட்சியானது மக்கள் உயிருடன் இருக்கும்போதும் அவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கின்றனர். மக்கள் இறந்த பின்பும் அவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கின்றனர் )
ராகுல் காந்தி மற்றும் அவரது ஆலோசகர் சாம் பிட்ரோடா ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி, “அரச குடும்ப இளவரசரின் ஆலோசகரும், அரச குடும்பத்தின் இளவரசரின் தந்தையின் (ராஜீவ் காந்தி) ஆலோசகரும் வாரிசு வரி விதிக்கப் போவதாகச் சொல்கிறது, மேலும் பெற்றோரிடமிருந்து பெற்ற பரம்பரை சொத்துக்களுக்கும் வரி விதிக்கப் போகிறது. உங்கள் கடின உழைப்பால் நீங்கள் சேர்த்த சொத்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படாமல் உங்களிடமிருந்து அதையும் காங்கிரஸ் பறித்துவிட பார்க்கிறது.
மேலும், “நீங்கள் உயிருடன் இருக்கும் வரை, காங்கிரஸ் அதிக வரிகளை விதிக்கும், நீங்கள் உயிருடன் இல்லாதபோது, அது உங்களுக்கு பரம்பரை வரியைச் சுமத்திவிடும். காங்கிரஸ் கட்சி முழுவதையும் தங்கள் மூதாதையரின் சொத்தாகக் கருதி, அதைத் தங்கள் பிள்ளைகளிடம் ஒப்படைத்தவர்கள், இப்போது இந்தியர்கள் தங்கள் சொத்தை தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.