மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டியல் சமூக இளைஞர்களை மலம் திண்ண வற்புறுத்தியதோடு, செருப்பு மாலை அணிவித்து வன்கொடுமையில் ஈடுபட்ட அஜ்மத் கான், ஆரிப் கான், இஸ்லாம் கான் உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களது வீடும் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின வாலிபர் மீது போதை ஆசாமி சுக்லா சிறுநீர் கழித்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்திய வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஷிவ்புரி மாவட்டம் வர்காதி கிராமத்தைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய 2 தலித் இளைஞர்கள், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் போனில் பேசியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அக்குடும்பத்தினர் மேற்படி இளைஞர்களை கடந்த ஜூன் 30-ம் தேதி அவர்களது வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார்கள்.
அங்கு அந்த இளைஞர்களை கொடூரமான முறையில் தாக்கியதுடன், மனித மலத்தை உண்ணும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த இளைஞர்களுக்கு செருப்புமாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தி இருக்கிறார்கள். இச்சம்பவம் குறித்த வீடியோ வைரலானது. இதையடுத்து, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறைக்கு உத்தரவிட்டார். மேலும், குற்றம் இழைத்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது, தலித் இளைஞர்களை வன்கொடுமை செய்தது இஸ்லாமியக் குடும்பம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அக்குடும்பத்தைச் சேர்ந்த அஜ்மத் கான், வகீல் கான், ஆரிப் கான், ஷாஹித் கான், இஸ்லாம் கான், ரஹிஷா பானு, சாய்னா பானு ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் மீது வன்கொடுமை பிரிவுகளின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, மாவட்ட நிர்வாகம் நடத்திய விசாரணையில் குற்றச் செயலில் ஈடுபட்ட மேற்படி முஸ்லீம் குடும்பத்தினர், அரசு நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து புல்டோசர் மூலம் அவர்களது வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.