வேட்டை கும்பலால் 3 போலீஸார் சுட்டுக்கொலை: நவ்ஷாத், ஷஜாத்கான் என்கவுன்ட்டர்!

வேட்டை கும்பலால் 3 போலீஸார் சுட்டுக்கொலை: நவ்ஷாத், ஷஜாத்கான் என்கவுன்ட்டர்!

Share it if you like it

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் நேற்று அதிகாலை வேட்டை கும்பலுக்கும் போலீஸாருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் எஸ்.ஐ. உட்பட 3 போலீஸார் கொல்லப்பட்டனர். பின்னர், போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் நவ்ஷாத், ஷஜாத்கான் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டம் சகாபர்கேடா கிராமம் ஆரோன் அருகே ஷாரோக் வனப்பகுதியில் மான்கள் மற்றும் கரும்புலிகள் வேட்டையாடப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குணா காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா உத்தரவின்பேரில் 3 போலீஸ் குழுக்கள் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வேட்டைக்காரர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த வேட்டைக்காரர்கள் கும்பல் ஒன்று, போலீஸ் குழுவை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. இதில், சப் – இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஜாதவ் (27), கான்ஸ்டபிள்கள் நீரஜ் பார்கவா (38), சாந்த்ராம் மீனா (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். சில போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.

மேலும், போலீஸார் நடத்திய பதிலடி தாக்குதலில் வேட்டைக்காரர்களில் ஒருவரான பெடோரியா கிராமத்தைச் சேர்ந்த நவ்ஷாத் மேவதி, ஸ்பாட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தகவலறிந்த எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா 100 பேர் கொண்ட போலீஸ் டீமை அனுப்பி வைத்தார். இக்குழு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டது. அப்போது, பஜ்ரங்கர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறிய குன்றின் அருகே பதுங்கியிருந்த ஷஜாத் கான் என்ற வேட்டைக்காரன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டான். மேலும், வேட்டை கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், சம்பவ இடத்தில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட மான் மற்றும் கரும்புலிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், மயிலின் சடலம் பறிமுதல் செய்யப்பட்டது. என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட வேட்டைக்காரன் நவ்ஷாத் மேவதி, தனது மருமகளின் திருமண விருந்தில் இறைச்சி பரிமாறுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு 4 ஆண் கரும்புலிகள், ஒரு பெண் கரும்புலி மற்றும் ஒரு மயில் ஆகியவற்றைக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து, பிடோரியாவில் உள்ள நவ்ஷாத்தின் சட்டவிரோத வீட்டையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரும் இடித்தனர். சம்பவம் நடந்த உடனேயே, முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தி, இறந்த காவலர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Share it if you like it