பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சர்பராஸ் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் பலரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல் கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, நம் நாட்டில் நாச வேலையில் ஈடுபடுவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) தகவல் வந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாஸ் ரெய்டு நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, பி.எஃப்.ஐ. அமைப்புக்கும் இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது.
இந்த நிலையில், என்.ஐ.ஏ. அமைப்புக்கு இ மெயிலில் ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சர்ப்ராஸ் என்பவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், மும்பையைத் தகர்க்க அவர் சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ. அமைப்பு மத்திய பிரதேச போலீஸாருக்கு தகவல் கொடுத்தது. போலீஸார், சந்தேகத்தின் அடிப்படையில் சர்ப்ராஸை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சர்பராஸுக்கு பல மொழிகள் பேசத் தெரியும். ஹாங்காங்கிற்கு சென்று வந்திருக்கும் இவர், சீனாவில் பல ஆண்டுகள் வசித்து வந்திருக்கிறார். அப்போது, அந்நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்ட நிலையில், தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சர்ப்ராஸிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.