ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவர்கள்: மீட்புப் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவர்கள்: மீட்புப் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர்!

Share it if you like it

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இரு சிறுவர்கள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டம் பதார்ச்சத் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன், நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அருகில் மூடப்படாமல் இருந்த 200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். திடீரென சிறுவனைக் காணாததால் திகைத்துப்போன பெற்றோர், ஆழ்துளைக் கிணற்றுக்குள் இருந்து சத்தம் வருவதை கவனித்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இத்தகவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை.யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீஸார், தீயணைப்புத் துறையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிறுவன் சுமார் 40 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதாகத் தெரிகிறது. எனவே, முதல்கட்டமாக சிறுவனுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, சிறுவனை சென்றடையும் வகையில் ஆழ்துளை கிணற்றின் அருகில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

இதேபோல, ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ஒருவனும், நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, மூடப்படாமல் இருந்த 55 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். இதுகுறித்து போலீஸாருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருகிறது. இச்சிறுவனை மீட்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. இந்த இரு சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it