சிவராத்திரிக்கு 18.82 லட்சம் தீபங்கள்: உஜ்ஜையினியில் புதிய உலக சாதனை!

சிவராத்திரிக்கு 18.82 லட்சம் தீபங்கள்: உஜ்ஜையினியில் புதிய உலக சாதனை!

Share it if you like it

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில், சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 18.82 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

பழைய கின்னஸ் சாதனைகள் அவ்வப்போது முறியடிக்கப்பட்டு, புதிய கின்னஸ் சாதனை படைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தாண்டு தீப உற்சவத் திருவிழாவை பிரதமர் மோடி தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். இதையொட்டி, சரயு நதிக்கரை படித்துறையில் மொத்தம் 15.76 லட்சம் தீப விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. ஒரே நேரத்தில் இவ்வளவு விளக்குகள் ஏற்றப்பட்டது புதிய கின்னஸ் சாதனையாக இடம்பெற்றது. இதில், அயோத்தியில் உள்ள அவத் பல்கலைக்கழக ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்றனர். இந்த புதிய கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை அந்நிறுவன அதிகாரிகள், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்கினார்கள்.

இந்த நிலையில்தான், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில், சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 18.82 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. உஜ்ஜைனியில் புகழ்பெற்ற மகாகாளேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. சிவராத்திரியை முன்னிட்டு இக்கோயிலிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு தீப விளக்குகள் ஏற்றப்பட்டன. 20,000 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ஷிப்ரா ஆற்றங்கரையில் தீபம் ஏற்றினார்கள். இங்குதான், சுமார் 18.82 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் டாங்கிரிகர் கூறுகையில், ‘‘கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது அயோத்தியில் 15.76 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. அந்த சாதனையை முறியடிக்கும் வகையில், மகாசிவராத்திரியை  முன்னிட்டு உஜ்ஜையினியில் 18.82 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன’’ என்றார். கின்னஸ் சாதனை பெற்றதற்கான சான்றிதழை, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் அந்த அமைப்பின் நிர்வாகிகள் வழங்கினர்.


Share it if you like it