கி.பி.1665-ம் ஆண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கி.பி.1665-ம் ஆண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Share it if you like it

மதுரை அருகே கி.பி. 1665-ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஏராளமான வரலாற்றுச் சுவடுகள் காணப்படுகின்றன. ஆகவே, வரலாற்று ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் இப்பகுதியில் கள ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். கீழடியில் அகழ்வாராய்ச்சியும் நடந்து வருகிறது. இந்த சூழலில், வாடிப்பாட்டி பகுதியில் பழங்கால கல்வெட்டுகள் இருப்பதாக வரலாற்று ஆர்வலர் அருண்சந்திரனுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அப்பகுதியில் கள ஆய்வை நடத்தி வருகிறார். அப்போது, வாடிப்பட்டி அருகிலுள்ள எஸ்.பெருமாள்பட்டி கிராமத்தில் கள ஆய்வு நடத்தியபோது, அங்குள்ள வயலில் சுமார் 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட ஒரு பெரிய கல்லில் எழுத்து பொறிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, மேற்படி கல்வெட்டு குறித்து மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தில் இருக்கும் கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். பின்னர், அக்கல்வெட்டை மூத்த கல்வெட்டு வல்லுநர் சாந்தலிங்கம் உதவியுடன் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இதன் பிறகு, அந்த கல்வெட்டை படி எடுத்து படிக்கப்பட்டதில் அக்கல்வெட்டு சாலிவாகன சகாபத் ஆண்டு 1587-ல் பொறிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதற்கு இணையான ஆண்டு கி.பி. 1665-வது ஆண்டாகும்.

அதாவது, திருமலைநாயக்கருக்குப் பின் மதுரையை ஆட்சி செய்த சொக்கநாத நாயக்கர் மற்றும் சொக்கநாத நாயக்கரின் தாயாருக்கு புண்ணியமாகவும் மற்றும் திருமலை நாயக்கர், முத்துவீரப்ப நாயக்கருக்கு புண்ணியமாகவும் மதுரை அவுசேக பண்டாரத்தின் பாரிசமாக அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த அறக்கட்டளைக்கு சில வரி விலக்கும் அளிக்கப்பட்டிருந்திருக்கிறது. இந்த தன்மத்துக்கு யாரேனும் கேடு விளைவித்தால் அவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவையும், தங்கள் தாயாரையும் கொன்ற பாவத்தில் போவார் என்று கூறப்பட்டிருக்கிறது.

இக்கல்வெட்டில் சொரிக்கான்பட்டி என்ற ஊரின் பெயர் சொறிகாமன்பட்டி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, மக்களின் பேச்சு வழக்கில் சொறிகாமன்பட்டி என்ற பெயர் மருவி தற்போது சொரிக்கான்பட்டி என்று பேச்சு வழக்கில் மாறி இருக்கலாம். மேலும், இவ்வூரின் எல்லையாக சுற்றியுள்ள கருமாத்தூர், கரடிகல்லு, பொன்னமங்கலம், கிண்ணிமங்கலம் என 4 ஊர்களின் பெயர்கள் கல்வெட்டில் கூறப்பட்டிருக்கிறது. இந்த அறக்கட்டளையை நன்கு பாதுகாத்து நமக்கு பின்னல் வரும் சந்ததிகளும் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான சொற்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it