பிரதமர் மோடி அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி கேள்வி எழுப்புபவர்கள், கருணாநிதி முதல்வராக இருந்தபோது அறிவித்த அரசு பல் மருத்துவக் கல்லூரி குறித்து கேள்வி எழுப்பாதது ஏன் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று 2015-ம் ஆண்டு பாரத பிரதமர் மோடி அறிவித்தார். இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்ட போதிலும், கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கு ஜப்பான் நாட்டு நிறுவனம் காலதாமதம் செய்து வருவதாக காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. எனினும், குறிப்பிட்ட இடத்தில் கட்டடம் கட்டப்படாவிட்டாலும், மாற்று ஏற்பாடாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, படித்து வருகின்றனர். ஆனால், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் எய்ம்ஸ் கட்டடம் என்னாச்சு என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதோடு, சமூக வலைத்தளங்களிலும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், தி.மு.க. அண்கோ கம்பெனிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விருதுநகர் பல் மருத்துவக் கல்லூரி விவகாரத்தை கையில் எடுத்திருக்கின்றன. அதாவது, தி.மு.க. ஆட்சியின்போது 2009-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், அறிவித்ததோடு சரி, அத்திட்டத்திற்காக நயா பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. இதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கருணாநிதி அறிவித்த திட்டம் என்பதால், ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை.
அதேசமயம், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2017-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விருதுநகர் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இதனிடையே, அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கும் ஒப்புதல் கிடைத்தது. இதையடுத்து, விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 28 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. அதன் அருகிலேயே 5 ஏக்கரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
மேலும், அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கான சிறப்பு அலுவலராக சென்னை பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். ஆனால், இடம் தேர்வு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. வெறும் பெயர்ப் பலகை மட்டும் அந்த இடத்தில் இருக்கிறது. மற்றபடி அந்த இடத்தில் வெறும் கருவேலா மரங்கள் மண்டிக் கிடக்கிறது. ஆகவே, இதை கையில் எடுத்திருக்கும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கருணாநிதி அறிவித்த விருதுநகர் பல் மருத்துவக் கல்லூரி எங்கே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை வைத்து நெட்டிசன்களும் கிண்டலடித்து வருகின்றனர்.