தமிழக அரசுக்குக்கூட தெரிவிக்காமல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் நிகழாண்டு மாணவர் சேர்க்கையை நடத்தி தி.மு.க.வின் முகத்தில் கரியை பூசி இருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.
2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வந்தது. பிறகு, மதுரை மாவட்டம் தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். இதன் பிறகு, தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வந்ததால், சுமார் 3 ஆண்டுகளாக எந்தப் பணியும் நடக்கவில்லை. ஆனால் தி.மு.க. தலைவர்களோ, இதெற்கெல்லாம் காரணம் மத்திய அரசுதான் என்பதுபோல, மக்களை மடைமாற்றி விட்டு, பா.ஜ.க. மீது குற்றம்சாட்டி கேலி, கிண்டல் செய்து வந்தது. குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, உதயநிதி கையில் ஒரு செங்கல்லை வைத்துக் கொண்டு, இதுதான் எய்ம்ஸ் என்று கிண்டல் செய்தது வக்கிரத்தின் உச்சம்.
இந்த நிலையில்தான், தி.மு.க. தலைவர்களின் முகத்தில் கரியை பூசும் வகையில், மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமலேயே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் நிகழாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அதாவது, இக்கல்லூரியில் முதல்கட்டமாக 50 மாணவர்கள் சேர்க்கைகும், கல்லூரிக்கு தனியாக கட்டடங்கள் கட்டும்வரை மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் இணைந்து படிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால், இத்தகவல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் ஹைலைட். அதன்படி, முதல்கட்டமாக இணையவழி கலந்தாய்வையும் மருத்துவக் கலந்தாய்வு குழுவினர் நடத்தி இருக்கிறார்கள். இதுவரை 7 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். தொடர்ந்து நடக்கும் கலந்தாய்வில் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மாணவர்களின் கல்விக் கட்டணம், பதிவுக் கட்டணம், டெபாசிட் கட்டணம், ஆய்வக மற்றும் யூனியன் கட்டணம் என வெறும் 1,628 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். அதேபோல, விடுதியில் சேரும் மாணவர்கள் கூடுதலாக 4,228 ரூபாய் மட்டும் கட்டினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக, வாண்டடாக வந்து வண்டியில் ஏறியிருக்கிறது தி.மு.க. அரசு. அதாவது, தி.மு.க. அரசுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கையை நடத்துவதுபோல, எய்ம்ஸ் மருத்துவமனையில் நிகழாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தி.மு.க.வைப் பொறுத்தவரை, மற்ற அரசுகள் செய்த சாதனைகளை தாங்கள் செய்ததாகக் கூறுவதையும், அதேசமயம், தங்களது அரசு செய்த தகிடுதத்தம் வேலைகளை மற்ற அரசுகள் செய்ததுபோலவும் பில்டப் செய்வதும், பீலா விடுவதும் வாடிக்கை. உதாரணமாக, ஸ்டெர்லைட் ஆலை முதல் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது வரை எல்லாமே தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்த தில்லாலங்கடி வேலைகள்தான். ஆனால், இத்திட்டங்களுக்கு எதிராக தற்போது மக்கள் போராட்டம் நடத்தி வருவதால், தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ள அ.தி.மு.க., பா.ஜ.க. மீது பழியைப்போட்டு வருகிறது. அதேபோல, மற்ற அரசுகள் நல்ல பெயர் வாங்கி விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பது தி.மு.க. அரசின் குணம். மதுரை எய்ம்ஸ் விவகாரத்திலும் இதையே கடைப்பிடித்தது தி.மு.க. அரசு. ஆகவே, எய்ம்ஸ் விவகாரத்தில் தி.மு.க. அரசை வச்சு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.