மதுரையில் தொட்டால் புட்டுப்போல உதிரும் மணல் சிற்பம்போல, தரமற்ற முறையில் பயணியர் நிழற்குடை கட்டடம் கட்டப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை அங்காடிமங்கலம் ஊராட்சியில் அமைந்திருக்கிறது கீழ்வடக்கூர் கிராமம். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் மதுரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்டது. இக்கிராமத்தில் மத்திய அரசின் 15-வது நிதிக்குழு மனியத் திட்டத்தின் கீழ், மாவட்ட ஊராட்சித் தலைவர் தி.மு.க.வைச் சேர்ந்த சூரியகலா கலாநிதியின், நிதியிலிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டிருக்கிறது. இக்கட்டடம் இன்னும் சில தினங்களில் திறக்கப்படவிருக்கிறது.
இந்த நிலையில்தான், இந்த பயணியர் நிழற்குடை கட்டடத்தின் தூண்கள் மற்றும் மேற்கூரையின் சிமென்ட் பூச்சுக்கள் லேசாக தொட்டாலே புட்டுப்போல உதிர்வதாகக் கூறி, வீடியோ எடுத்து இப்பகுதி இளைஞர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், திறப்பு விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இப்பயணியர் நிழற்குடையை கணேசன் என்கிற ஒப்பந்ததாரர் கட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ வைரலான நிலையில், வட்டார வளர்ச்சி அதிகாரி வில்சன் உள்ளிட்ட அதிகாரிகள் பயணியர் நிழற்குடையை பார்வையிட்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.