கொதிக்கும் கூலில் தவறி விழுந்த வாலிபர் பலி!

கொதிக்கும் கூலில் தவறி விழுந்த வாலிபர் பலி!

Share it if you like it

மதுரையில் கொதிக்கும் கூலில் தவறி விழுந்த வாலிபர், பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆடி மாதம் கோயில் திருவிழாக்கள் களைகட்டும். குறிப்பாக, அம்மன் கோயில்களில் திருவிழா நடைபெறும். இதையொட்டி, கோயில் நிர்வாகம் சார்பிலும், தனியார்களும் அம்மனுக்கு கூல் காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியிலுள்ள மேலத்தெரு மாரியம்மன் கோயிலிலும் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி, கடந்த ஆடி வெள்ளிக்கிழமை தினத்தன்று, அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய கேழ்வரகை வைத்து கூல் காய்ச்சப்பட்டது.

சுமார் 10-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சமையல்காரர்கள் கூல் காய்ச்சிக் கொண்டிருக்க, பக்தர்கள் முத்து மாரியம்மனை தரிசிக்க வரிசையாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அம்மனை தரிசித்து விட்டு திரும்பிய முத்துக்குமார் என்கிற முருகன், கூல் இடத்திற்கு வந்திருக்கிறார். இவருக்கு அடிக்கடி காக்கா வலிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், கூல் காய்ச்சும் இடத்திற்கு வந்தபோதும், முத்துக்குமாருக்கு திடீரென காக்கா வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், நிலைதடுமாறிய முத்துக்குமார், அருகிலிருந்த கூல் காய்ச்சும் அண்டாவை பிடித்திருக்கிறார்.

ஆனால், கைவழுக்கி அந்த அண்டாவிற்குள்ளேயே விழுந்து விட்டார். இதை பார்த்ததும் அங்கு நின்றிருந்த மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்து முத்துக்குமாரை தூக்க முற்பட்டனர். ஆனால், எவ்வளவு போராடியும் வெளியே தூக்க முடியவில்லை. இதையடுத்து, அந்த அண்டாவை அப்படியே கீழே சாய்த்துவிட்டு முத்துக்குமாரை மீட்டனர். பிறகு, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, முத்துக்குமார் உயிரிழந்து விட்டார். கோயில் திருவிழாவில் நடந்த இச்சம்பவம் அந்தப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.


Share it if you like it