மதுரையில் மா.கம்யூ. அராஜகம்: போலீஸ்காரருக்கு மா.செ. பளார்!

மதுரையில் மா.கம்யூ. அராஜகம்: போலீஸ்காரருக்கு மா.செ. பளார்!

Share it if you like it

மதுரையில் நேற்று நடந்த அக்னிபாத் போராட்டத்தின்போது, ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர், தடுத்த போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசின் அக்னிபத் திட்டம், மதுரை – வாரணாசி இடையே தனியார் ரயில் இயக்கும் முடிவு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மதுரையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன் தலைமையில் நடந்த போராட்டத்தில், பேரணியாக வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். ஆகவே, மெயின் ரோட்டிலேயே காம்ரேடுகளை தடுத்து நிறுத்திய போலீஸார், எம்.பி.. வெங்கடேசன் முதல் ஆளாக நின்றிருந்ததால் அவரை பின்னோக்கி தள்ள தயங்கினர்.

இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியினர், போலீஸாரை தள்ளிவிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைய முயன்றனர். எனவே, கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் தடுத்த முயன்றனர். எனினும், சிலர் திமிறிக் கொண்டு ரயில் நிலையத்துக்குள் சென்றனர். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனும், போலீஸாரை தள்ளிவிட்டு ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றார். உடனே, ஆயுதப்படை போலீஸ்காரர் மாரிராஜ், ராஜேந்திரனை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், போலீஸ்காரர் மாரிராஜ் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார்.

இதைக் கண்டு போலீஸார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுவே சாதாரண பொதுமக்களாக இருந்தால் போலீஸாரின் நடவடிக்கையே வேறு மாதிரியாக இருந்திருக்கும். சுற்றி வளைத்து தாக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று லாக்அப் டெத் வரை கூட சம்பவமாகி இருக்கும். ஆனால், ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்பதாலும், மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாலும் போலீஸார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர், போலீஸ் தடையை மீறி ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரதான நுழைவு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது, ரயில் மறியலில் ஈடுபட திடீரென சிலர் கட்சி கொடியுடன் ரயில்களை நோக்கி ஓடினார்கள். அவர்களை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தடுத்து நிறுத்தினார். இதனால், இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் வைத்திருந்த கொடியை போலீஸ் கமிஷனர் பறித்துச் சென்று விட்டார். உடனே, அதை பிடுங்குவதற்காக கம்யூனிஸ்ட் கட்சியினர் கமிஷனரை விரட்டிச் சென்றனர். இச்சம்பவத்தால் மதுரை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, எம்.பி. வெங்கடேசன் மற்றும் 50 பெண்கள் உட்பட 350 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். மேலும், போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது, அத்துமீறியது ஆகிய பிரிவுகளின் கீழ் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் மீது திலகர்திடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


Share it if you like it