கடையில் ரூ.10 லட்சம் கொள்ளை: ஷாபாஸ், அர்பாஸ் உட்பட 4 பேர் கைது!

கடையில் ரூ.10 லட்சம் கொள்ளை: ஷாபாஸ், அர்பாஸ் உட்பட 4 பேர் கைது!

Share it if you like it

மதுரையில் கண்ணாடி கடையில் 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த ஷாபாஸ், அர்பாஸ் மற்றும் 15, 17 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் என 4 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

மதுரை சின்னகண்மாய் சண்முகாநகரைச் சேர்ந்தவர் முருகவேல். மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னிதி விட்டவாசல் தெருவில் கண்ணாடிக் கடை வைத்திருக்கிறார். அருகிலேயே, இவரது சகோதரரும் கண்ணாடிக் கடை நடத்தி வருகிறார். இந்த சூழலில், கடந்த சனிக்கிழமை இரவு இருவரும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை கடைக்கு விடுமுறை என்பதால், இருவரும் வரவில்லை. ஆனால், முருகவேல் கடையின் ஷட்டர் அரைகுறையாக திறந்து கிடந்தது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் முருகவேலுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, பதறியடித்துக் கொண்டு வந்த முருகவேல், கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகவேல், இதுகுறித்து விளக்குத்தூண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடையில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தபோது, முருகவேல் சகோதரரின் கண்ணாடிக் கடையில் வேலை செய்த ஷாபாஸ், சிலருடன் வந்து பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

ஷாபாஸ், உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டம் இதாக் கிராமத்தைச் சேர்ந்த இர்ஷாத் என்பவரின் மகன். இவனும், இவனது தம்பிகள் அர்பாஸ் மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து முருகவேல் கடையில் இருந்த 10 லட்சத்தை கொள்ளையடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கடையின் மாடியில்தான் சக ஊழியர்களுடன் தங்கி இருந்தார்கள். ஆனால், கொள்ளையடித்த பிறகு, 4 பேரும் மாயமாகி விட்டார்கள். இதைத் தொடர்ந்து, மேற்கண்ட நபர்களை போலீஸார் தேடி வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் போலீஸார் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, அங்கு ஷாபாஸ், அவனது தம்பிகள் அர்பாஸ் மற்றும் 2 சிறுவர்களும் ரயில் மூலம் உ.பி.க்கு தப்பிச் செல்ல காத்திருந்தது தெரியவந்தது. பின்னர், 4 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த பணத்தை மீட்டதோடு, 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Share it if you like it