இதுக்குப் பேருதான் நம்ம ஸ்கூல் திட்டம் போல?!

இதுக்குப் பேருதான் நம்ம ஸ்கூல் திட்டம் போல?!

Share it if you like it

மதுரை மாவட்டத்தில் பள்ளியில் நுழைவு வாயிலை மறித்து, மாணவர்கள் செல்ல முடியாதபடி, 4 அடி உயரத்துக்கு மழைநீர் கால்வாய் கட்டி இருக்கும் சம்பவம், மக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கும் அதே நேரத்தில், இதுக்குப் பேருதான் நம்ம ஸ்கூல் திட்டமோ என்று கிண்டல் செய்யும் நிலைக்கும் ஆளாகி இருக்கிறது.

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் ஒப்பந்த பணிகளில் ஏராளமான காமெடிகள் அரங்கேறி வருகிறது. உதாரணமாக, சாலை நடுவில் இருக்கும் மின்கம்பங்களை அகற்றாமல் அப்படியே ரோடு போடுகிறார்கள். அதேபோல, மாநகர தெருக்களில் சாலையோரம் நிற்கும் இரு சக்கர வாகனங்களை அப்புறப்படுத்தாமல், அவற்றின் மீதே சிமெண்ட் சாலை அமைக்கிறார்கள். சில இடங்களில் ஆழ்துளை கிணறுகளின் கைப்பம்புகளை மூடி சாலை அமைக்கிறார்கள். இதைவிட ஹைலைட் என்னவென்றால், கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கும் போது, அதன் மீது கான்கிரீட் போட்டு கழிவுநீர் கால்வாய் அமைக்கிறார்கள். அதுமட்டுமா, பள்ளிகளில் கட்டப்படும் காம்பவுண்ட் சுவர், மறுநாளே இடிந்து விடும் அளவுக்கு ஸ்ட்ராக்காக (?!) கட்டுகிறார்கள்.

இந்த நிலையில்தான், அடுத்த காமெடியாக பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்றுவரும் நுழைவு வாயிலை மறித்து, மழைநீர் கால்வாய் கட்டி இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் மேலூர் அருகே காரைக்குடி சாலையில் அமைந்திருக்கிறது நாவினிப்பட்டி கிராமம். இங்கு, நூற்றாண்டு விழா கண்ட, ஊராட்சி ஒன்றிய மழலையர் மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. யு,கே.ஜி. முதல் 8-ம் வகுப்புவரையுள்ள இப்பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த சூழலில்தான், மாணவ, மாணவிகள் பள்ளிக்குள் நுழைய முடியாத அளவுக்கு இப்பள்ளியின் நுழைவு வாயிலை மறித்து, சுமார் 4 அடி உயரத்துக்கு மழைநீர் கால்வாயை கட்டி இருக்கிறார்கள். இதனால், மாணவ, மாணவிகள் மேற்படி கால்வாயை ஏறிக்குதித்து பள்ளிக்குச் சென்றுவரும் அவலநிலை நிலவி வருகிறது.

இதையடுத்து, பள்ளி நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் மேற்படி மழைநீர் கால்வாயை அகற்றி விட்டு, கீழ்புறமாக அமைக்கும்படி ஊர்மக்கள் சேர்ந்து ஒப்பந்ததாரரிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால், இதுவரை மழைநீர் கால்வாயை அகற்றி ஒப்பந்ததாரர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊர்பொதுமக்கள் ஒன்றுகூடி, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து, பள்ளியின் பக்கவாட்டுச் சுவரை இடித்து, மாணவ, மாணவிகள் சென்று வர வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். எனினும், சில மாணவ, மாணவிகள் மழைநீர் கால்வாய் மீது ஏறி பள்ளிக்கு சென்று வருவதோடு, ஏறி விளையாடியும் வருகின்றனர். இதனால், மாணவர்கள் தவறி விழுந்து காயமடைய வாய்ப்பிருப்பதாக பெற்றோர் அச்சம் தெரிவிக்கிறார்கள். பள்ளியின் நுழைவு வாயிலை மறித்து மழைநீர் கால்வாய் அமைத்திருக்கும் இந்த விவகாரம், பொதுமக்கள் மத்தியில் கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.


Share it if you like it