ஹிந்து கோயில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காமெடி நடிகர் சூரிக்கு, ஹிந்துக்கள், ஹிந்து அமைப்புகள் தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
ஆரம்ப காலத்தில் ஆன்மிக மயமாக இருந்த தமிழ்த் திரையுலகம், தற்போது நாத்திகர்களின் கூடாரமாக மாறி இருக்கிறது. நாத்திகமும், பெரியாரிஸமும், கம்யூனிஸமும், அம்பேத்கரிஸமும் பேசினால் மட்டுமே, தமிழ்த் திரையுலகில் நிலைத்து நிற்க முடியும் என்கிற மனநிலை நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு வந்து விட்டதுதான் இதற்குக் காரணம். இதனால், பெரும்பாலான படங்கள் உயர் ஜாதியினரை விமர்சிக்கும் வகையிலும், கடவுள் மறுப்பு பேசும் வகையிலுமே இருக்கின்றன. மேலும், , மத்திய அரசுக்கு எதிரான வசனங்களும் தூக்கலாக இருக்கும். இதில், சில படங்கள் விதிவிலக்காக ஆன்மிகம் பேசும் வகையில் இருப்பதும் உண்டு.
இந்த திரைப்பட சிந்தனை, நடிகர்கள் முதல் காமெடி நடிகர்கள் வரை பரவி, பொதுவெளியிலும் பிரதிபலிப்பது உண்டு. அந்த வகையில், நடிகர்கள் சூர்யா, அவரது சகோதரர் கார்த்தி, சித்தார்த் ஆகியோர் ஹிந்து கடவுள்கள் குறித்தும், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா ஒருபடி மேலே போய், கோயில்களை கட்டுவதற்கு பதில், பள்ளிக் கூடங்களை கட்டினால், பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். முஸ்லீமான ஜோதிகா, ஹிந்துக் கோயில்கள் பற்றி பேசியது, ஹிந்துக்கள், ஹிந்து அமைப்புகள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார் ஜோதிகா.
இந்த நிலையில், தற்போது கோயில்கள் பற்றி பேசி, சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் கமெடி நடிகர் சூரி. நடிகர் சூர்யா தயாரிப்பில், அவரது தம்பி கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் விருமன் படம், ஆகஸ்ட் 12-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரை கே.கே.நகரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய காமெடி நடிகர் சூரி, “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட, ஆயிரம் அன்னச்சத்திரம் கட்டுவதைவிட ஒரு மாணவரை படிக்க வைப்பது பல நூறு ஆண்டுகள் பேசும். அதை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வரும் அண்ணன் சூர்யாவுக்கு நன்றிகள்” என்று கூறியிருக்கிறார்.
சூரியின் இந்த பேச்சுதான் ஹிந்துக்கள், ஹிந்து அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எதற்கெடுத்தாலும் ஹிந்து கோயில்களை பற்றி மட்டுமே பேசும் நடிகர்கள் உள்ளிட்ட அனைவரும், ஏன் கிறிஸ்தவர்களின் சர்ச் பற்றியோ அல்லது முஸ்லீம்களின் மசூதி பற்றியோ பேசுவதில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். மேலும், தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்காகவும், அடுத்த படத்தில் தனக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நடிகர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். இது மிகவும் இழிவான செயல் என்றும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். நெட்டிசன்களும் காமெடி பீஸு என்று சூரிக்கு எதிராக மீம்ஸ்களை போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.