மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடியின வாலிபரை தனது வீட்டிற்கு வரவழைத்து, அவரது கால்களை கழுவி, மக்கள் எனக்கு கடவுளைப் போன்றவர்கள் என்று உருக்கமாக கூறியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் தஷ்மத் ராவத் என்கிற பழங்குடியின வாலிபரின் மீது, பிரவேஷ் சுக்லா என்கிற நபர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைக் கண்ட மக்கள் ஆவேசமடைந்து கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சுக்லா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, பிரவேஷ் சுக்லா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார், அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான். அதன்படி, சுக்லா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. நேற்று காலை போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிறுநீர் கழிக்கப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் தஷ்மத் ராவத்தை தனது இல்லத்திற்கு வரவழைத்தார் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான். அங்கு, அந்த வாலிபரின் கால்களை தனது கைகளால் கழுவிய முதல்வர் சௌஹான், அவரிடம் “அந்த வீடியோவை பார்த்து நான் வேதனையடைந்தேன். அச்சம்பவத்திற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் எனக்கு கடவுள் போன்றவர்கள்” என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானின் செயலுக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.