வெறும் 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்கிற தகவல் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் தி.மு.க. அரசு மீது பெண்கள் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்திலுள்ள பெண்கள் அனைவருக்கும் மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்து, தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. வருகிற செப்டம்பர் மாதம் முதல் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் உரிமைத்தொகை பெற தகுதியுடைவர்கள் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு உரிமைத்தொகை கிடையாது. அதேபோல, 5 ஏக்கர் நிலம் இருப்பவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், விதவை பென்சன், முதியோர் பென்சன், அரசு உதவித்தொகை பெறுபவர்களுக்கு உரிமைத்தொகை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் யாருக்குத்தான் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அதாவது, 2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள்தான் அதிகம். அதேபோல, இன்று நடுத்தர வர்க்கத்தினர்கூட கார் வைத்திருக்கிறார்கள். ஆகவே, ஒட்டுமொத்தமாக கூட்டிக் கழித்துப் பார்த்தால் வெறும் 10 சதவிகிதம் பெண்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை கிடைக்கும்.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பெண்கள் தி.மு.க. அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்.