ஆண் குழந்தை பிறக்க வேண்டுமானால், அருவியில் நிர்வாணமாகக் குளிக்க வேண்டும் என்று, இஸ்லாமிய மவுலானா சொன்னதை நம்பி, அருவியில் மனைவியை குளிக்க வற்புறுத்திய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஐடியா கொடுத்த மவுலானாவையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பம் அது. இவர்களது மகனுக்கு 2013-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். இத்தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், வாரிசுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் கோயில், குளம் என்று அலைந்தனர். ஆனாலும், ஆண் குழந்தை பிறக்கவில்லை. இந்த சூழலில், அத்தொழிலதிபரின் உறவினர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த மவுலானா பாபா ஜமாதார் என்கிற இஸ்லாமிய மந்திரவாதியிடம் சென்றால், மாந்திரீகத்தின் மூலம் ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லி இருக்கிறார். இதை நம்பி, அத்தொழிலதிபர் குடும்பமும், மந்திரவாதி மவுலானாவை சென்று சந்திருக்கிறார்கள்.
அப்போது, அந்த மந்திரவாதி மவுலானா, இஸ்லாமிய முறைப்படி சில சடங்கு சம்பிரதாயங்களை செய்ததோடு, அப்பெண்ணை அருவியில் நிர்வாணமாகக் குளிக்கும்படி கூறியிருக்கிறார். இதையடுத்து, அப்பெண்ணை ராய்க்கட் மாவட்டத்திலுள்ள அருவி ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது அத்தொழிலதிபர் குடும்பம். அங்கு, அந்த அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில், அப்பெண்ணை நிர்வாணமாகக் குளிக்கச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறது அத்தொழிலதிபர் குடும்பம். ஆனால், இதற்கு மறுத்துவிட்ட அப்பெண், அங்கிருந்து தப்பி வந்து விட்டார்.
பின்னர், தனது கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் மந்திரவாதி மவுலானா பாபா ஜமாதார் ஆகியோர் மீது போலீஸில் புகார் கொடுத்தார். அப்புகாரில், பலரது முன்னிலையில் தன்னை நிர்வாணமாக அருவியில் குளிக்கச் சொன்னதோடு, தனது கணவரும், அவரது குடும்பத்தினரும் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வருவதாகவும், தனது கையெழுத்தை தனது கணவரே போட்டு வங்கியில் 75 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதன் பேரில், அப்பெண்ணின் கணவர், குடும்பத்தினர் மற்றும் மவுலான பாபா ஜமாதார் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனர்.