அரசு ஊழியர்கள் செல்போனில் பேசும்போது, ‘ஹலோ’ என்று சொல்வதற்கு பதில் ‘வந்தே மாதரம்’ என்று சொல்லி பேச்சை துவங்க வேண்டும் என்று மஹாராஷ்டிர மாநில அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
மஹாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்து, அதிருப்தி சிவசேனா, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்த அரசு பதவியேற்ற 41 நாட்களுக்குப் பிறகு, கடந்தவாரம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், அதிருப்தி சிவசேனாவைச் சேர்ந்த 9 பேர், பா.ஜ.க.வை சேர்ந்த 9 பேர் என மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு நேற்று இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில்தான், புதிய அமைச்சராக பொறுப்பேற்ற சுதிர் முங்கந்திரவாரு, ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அதாவது, மாநிலத்திலுள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் செல்போனில் பேசும்போது, ‘ஹலோ’ என்று சொல்லி பேச்சை ஆரம்பிக்கக் கூடாது. மாறாக, ‘வந்தே மாதரம்’ என்று சொல்லித்தான் பேச்சை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவு குறித்து அமைச்சர் சுதிர் முங்கந்திரவாரு கூறுகையில், “நாம் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். நாம் செல்போனில் பயன்படுத்தும் ‘ஹலோ’ என்கிற சொல் ஆங்கில வார்த்தை. ஆகவே, இந்த 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த வார்த்தையை விட்டுவிட வேண்டும். இதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என்கிற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். காரணம், ‘வந்தே மாதரம்’ என்பது வெறும் வார்த்தையல்ல, ஒவ்வொரு இந்தியனும் அனுபவிக்கும் உணர்வு. இதன் மூலம் நாட்டின் மீதான பற்று அதிகரிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.
நாட்டுப் பற்று கண்டிப்பாக தேவை!