மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிக்கின்றனர். இவர்களில் 25 பேர் மீட்கப்பட்ட நிலையில், 5 பேர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது. மற்றவர்களை மீட்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. ராய்கட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள இரசல்வாடி என்கிற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்த பகுதியில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 30 குடும்பங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாகத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட அதிகாரிகள் மற்றும் தாசில்தார் நேரில் சென்று பார்வையிட்டனர். இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 4 பேர் உயிரிழந்து விட்டனர். 21 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், உள்ளூர் மக்கள், தொண்டு நிறுவனத்தினர், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர். இரவில் மழை பெய்து கொண்டே இருந்ததால் சரியாக மீட்பு பணியை மேற்கொள்ள முடியவில்லை. சம்பவ இடத்தில் 40 வீடுகள் வரை இருந்தது. இரவில் வெளிச்சம் குறைவு காரணமாக சிறிது நேரம் மீட்பு பணி நிறுத்தப்பட்டு காலையில் தொடங்கப்பட்டுள்ளது. மலையின் மேல் பகுதியில் குடிசைகள் அமைத்து வாழ்ந்தவர்களின் வீடுகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணிகளை மாநில அமைச்சர் உதய் சாவந்த் நேரில் பார்வையிட்டு வருகிறார். ராய்கட் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று கூறி வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் மும்பை, பால்கர், ராய்கட், ரத்னகிரி, கோலாப்பூர், சாங்கிலி, நாக்பூர், தானே போன்ற பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மழை வெள்ளம் மற்றும் மீட்பு பணிகளை சமாளிக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் மும்பையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.