மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரேவின் கையை விட்டு நழுவி, ஷிண்டே கைக்கு மாறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டிருப்பது நாம் அறிந்ததே. அதாவது, 2019-ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், பா.ஜ.க. 106 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றன. ஆனால், யார் முதல்வர் என்பதில் இரு கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. எனவே, இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வகிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. எனினும், யார் முதல் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பது என்பதில் மீண்டும் போட்டி ஏற்பட்டது.
ஆகவே, அதிக இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க. முதல் இரண்டரை ஆண்டுகளும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவும் முதல்வர் பதவி வகிப்பது என்று பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை சிவசேனா ஏற்க மறுத்து, முதல் இரண்டரை ஆண்டுகால பதவியை கேட்டது. இதற்கு பா.ஜ.க. சம்மதிக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இதையடுத்து, எதிரி மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே. இதனால், பா.ஜ.க. கடும் அதிருப்தி பிளஸ் ஆத்திரமடைந்தது. அதேபோல, எதிரிக் கட்சிகளின் தயவில் ஆட்சி அமைத்ததும், அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கும் பிடிக்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க, உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததும், உட்கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆட்சியில் உத்தவ் தாக்கரேவை விட அவரது மகன் ஆதித்ய தாக்கரேவின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. இதுவும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும், தமது சித்தாந்தங்களுக்கு நேர் மாறான கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்ததால், சித்தாந்தத்தை எதிர்த்து அரசியல் செய்யும் நிலை ஏற்பட்டது. இதுவும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு உறுத்தலை தந்தது.
இதையடுத்து, சமீபத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஷிண்டே தலைமையில் அணி திரண்டனர் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள். 40 பேர் ஷிண்டே பக்கம் தாவியதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது போட்டி சிவசேனா. ஷிண்டே முதலமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில், மொத்தமுள்ள 19 சிவசேனா எம்.பி.க்களில் 13 பேர் ஷிண்டே பக்கம் தாவி விட்டனர். இதைத் தொடர்ந்து, மேற்படி எம்.பி.க்களுடன் டெல்லி சென்று லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்தார் ஷிண்டே. மேலும், ஜனாதிபதி தேர்தலிலும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கே வாக்களித்தனர்.
இந்த நிலையில்தான், சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரேவின் கையை விட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, அக்கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் போட்டி தலைவரான ஷிண்டேவின் பக்கம் சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து, கட்சி விவகாரம் கோர்ட் வரை சென்றிருக்கிறது. எனினும், சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்பதை தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும். அந்த வகையில், பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் ஷிண்டே பக்கம் இருப்பதால், சின்னமும் இந்த அணிக்கு கிடைக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த சூழலில், சிவசேனா உடைவதை தடுக்க, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தலைவர்களுடன் பேசியிருக்கிறார் உத்தவ் தாக்கரே. ஆனால், 2019-ல் நடந்த கசப்பான சம்பவங்களால், உத்தவ் தாக்கரே இல்லாத சிவசேனாவை உருவாக்கவே பா.ஜ.க. தலைவர்கள் விரும்புகின்றனர். ஆகவே, உத்தவ் தாக்கரேவின் சமாதானத்தை அவர்கள் ஏற்கவில்லை. இதனிடையே, உத்தவ் தாக்கரேவின் மனைவி, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார். இதற்கும் பா.ஜ.க. தலைவர்கள் அனுமதி கொடுக்காததால் ஷிண்டேவை தொடர்புகொள்ள முடியவில்லை. இதன் காரணமாக, உத்தவ் தாக்கரேவிடமிருந்து ஷிண்டேவுக்கு சிவசேனா கைமாறுவது உறுதி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.