பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்து ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக, பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான், மகாராஷ்டிராவைச் சேர்ந்த காலித் முபாரக் கான் ஆகியோரை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவைச் சேர்ந்த பலரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா, அல் உம்மா, சிமி உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது தெரிந்து விஷயம்தான். இதுபோன்ற நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பு கண்காணித்து கைது செய்து வருகிறது. மேலும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பைச் சேர்ந்த பலரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, பி.எஃப்.ஐ. அமைப்புக்கு இந்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது.
இந்த சூழலில், இந்தியாவில் இருந்து ஒரு கும்பல் ஆயுதப் பயிற்சிக்காக பாகிஸ்தான் நாட்டுக்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாக டெல்லி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மேலும், அக்கும்பல் பிப்ரவரி 14-ம் தேதி டெல்லிக்கு வந்திறங்கி, செங்கோட்டை பகுதியில் முகாமிட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டெல்லி போலீஸார் செங்கோட்டை பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டதோடு, சல்லடை போட்டு சளித்தனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் சுற்றித் திரிந்தனர். இதைத் தொடர்ந்து, மேற்கண்ட 2 பேரையும் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்திருக்கிறார்கள். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், மேற்கண்ட இருவரது உடமைகளையும் சோதனை செய்தனர். அப்போது அவர்களது பைகளில் 2 துப்பாக்கிகளும்., 10 தோட்டாக்களும், கத்தி மற்றும் வயர் கட்டர்களும் இருந்தன.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஒருவன் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காலித் முபாரக் கான் என்பதும், மற்றொருவன் தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பதும் தெரியவந்தது. மேலும், மேற்கண்ட 2 பேருக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒருவனுடன் சமூக வலைத்தளம் பழக்கம் ஏற்பட்டதும், அவனது வழிகாட்டுதலின்படி இருவரும் பயங்கரவாத அமைப்பில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக பாகிஸ்தான் நாட்டுக்கு செல்லவிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.