மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை | சுதந்திரம்75 | Freedom75

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை | சுதந்திரம்75 | Freedom75

Share it if you like it

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

            மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தோன்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகம், தன் பழைய மாட்சிமைகளை இழந்து திகழ்ந்தது. ஒருவாறு பழமைக்கு விடை கொடுக்கவும், புதுமைக்குக் கட்டியம் கூறவும், ஆயத்தமாகிய நிலையிலிருந்தது. அந்நேரத்தில் பழமையில் வேர் கொண்ட புதுமை விருட்சமாய் இருந்தவர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.  இவருடைய நூல்களில் இடம் பெற்றுள்ள மொழி வளமும், இலக்கிய நயமும், சாத்திர நுட்பமும் இலை மறை காய் போல் காலத்தில் மறைந்துள்ள கனியாய் உள்ளன.

புகழோடு தோன்றியவர்:

            மதுரை மாநகரில் சிதம்பரம் பிள்ளை அன்னத்தாச்சி என்ற பெற்றோரைப் பெருமிதம் கொள்ளும்படி மகவாக பிறந்தவர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள். 6.4.1815 அன்று பிறந்த இவருக்கு, ஐந்தாம் அகவையில் தந்தையே குருவாக அமைந்தார். அவருடைய கேள்வியறிவும், பா இயற்றும் வல்லமையும் அவரை மெருகேற்றின.

மழையும் பாடலும்:

            தெய்வ பக்தி மிகுந்த அக்காலத்தில், மழையின்றி வளம் குன்றி, வறண்டு போயின, என்னெய் கிராமம். அந்த கிராமத்தில், பெருமதிப்பு மிக்க பிள்ளையின் தந்தை சிதம்பரம் பிள்ளையை மக்கள் அணுக, அவரும் சிவபெருமானை நினைத்து சோகங் குற்றவுயிர் என்று தொடங்கும் பாடலை இயற்றினார். பாடல் தமிழ்ச்சுவை மட்டுமல்ல மழைச்சுவடு காணவும் வழி வகுத்ததால், இவர் புகழ் பரவியது.

மனனமும் பாடல் புனைய ஆர்வமும்:

            அக்காலத்தில் நூல்கள் பல அச்சிடாமல் இருந்த காரணத்தால், தந்தை வழியில் சதகங்கள், மாலைகள், நன்னூல் ஆகியவற்றை மனனம் செய்தார். இந்த மனனத்தைக் கண்டு வியந்த தந்தையும், குருவுமான சிதம்பரம் பிள்ளை அவர்கள் திரிபு, யமகம், சிலேடை ஆகிய வகைகளில், கவி பாடப் பயிற்றுவித்தார். ஒவ்வொரு நூலை அல்லது பாடத்தைப் படித்த பிறகு அந்நூலைப் போலவே சொற்றொடர்களையும், கருத்துகளையும் வைத்து பாட வேண்டும் என்ற எண்ணத்தால், பாடல்கள் பல புனைந்தார்.

கற்றல் ஆர்வம்:

அக்காலப் புலவர்கள் ஒருசில நூல்களில் ஆழமான புலமை உடையவராய் விளங்கியமையால், புலவர் ஒருவர் குறிப்பிட்ட ஒருசில நூல்களையே பாடம் சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதனால் ஒருவரிடமே, அனைத்து நூல்களையும் பயில்வது இயலாததாக இருந்தது. பிள்ளையவர்கள் ஆசிரியர் பலரிடமும் சென்று, பாடம் கேட்கும் ஆர்வம் கொண்டார்.

வேலாயுத முனிவர், ஏற்றுண்டு வாழும் துறவி, கற்குடி பெரியோர், திரிசிரபுரம் செட்டி பண்டாரத்தையா என்று அவர் தேடிச் சென்று கற்கும் பழக்கத்தை உண்டியிர்க்கும் வழக்கமாகவே கொண்டிருந்தார். நாள்தோறும் தேவார, திருவாசகப் பாடல்களை மனப்பாடம் செய்தும் பொருள் தெரிந்து, அவற்றில் ஈடுபட்டு, மனமுருகியும் வந்தார். 

சென்னை வருகை:    

இலட்சுமணப் பிள்ளை என்பவரின் உதவியுடன் சென்னை வந்து, “போர்டு” என்கிற ஆங்கிலேயர் நிகழ்த்தி வந்த தமிழ்த் தொண்டில் பங்கேற்றார். பிள்ளையவர்களின் ஆற்றலைக் கண்டு வியந்த காஞ்சிபுரம் சபாபதி முதலியார், திருவம்பலத் தின்னமுதம் பிள்ளை, எழும்பூர்த் திருவேங்கடாசல முதலியார் ஆகிய மூவரின் நட்பு பிள்ளையவர்களுக்குச் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் தமிழார்வலர், தமிழ்ப் புலவர் பலரது நட்பைப் பெற்று தந்தது.

படித்து படியெடுக்கும் பண்பு:

            பல நூல்களைக் கற்றறிந்தும், விரித்துரைத்தும் வாழ்ந்து, சென்னையைப் பிரிய மனமின்றி, திரிசிரபுரம் வந்தார். மாணாக்கருக்குப் பாடம் சொல்வதுடன், இரவில் புதிய நூல்களைப் படிப்பதையும் வழக்கமாகக் கொண்டார்.

blank

மகாவித்துவான் பட்டம்:     

            இவர் திருவாவடுதுறைக்குச் சென்ற போது, ஆதீனத்தில் சின்னப்பட்டமாக மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் இருந்தார். தேசிகர் திரிகூடராசப்பக் கவிராயர் பரம்பரையினர். ஆதினத் தலைவர் அம்பலவாண தேசிகரின் ஆணையால், திருவாவடுதுறை ஆதின வித்துவானாக அமர்த்தப் பெற்றார். அம்பலவணத் தேசிகர் மீதான அன்பு மேலிட்டு, கலம்பகம் ஒன்றை இயற்றினார். இதன் பொருள்நயம் சைவ மரபுகள் ஆகியவற்றைக் கண்டு, அனைவரும் மகிழ்ந்து கொண்டாடினர். மடத்தைச் சேர்ந்தவர்கள் பிள்ளையவர்களுக்குச் சிறப்புச் செய்ய வேண்டுமென்று, ஆதினத் தலைவரிடம் விண்ணப்பித்தனர். தலைவர் சின்னப்பட்டமாகிய சுப்பிரமணிய தேசிகரோடு கலந்து பேசி, “மகாவித்துவான்” என்னும் பட்டத்தைப் பிள்ளையவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

படைப்பின் மகத்துவத் துளிகள் சில:

            சூரியனார் கோயில் ஆதினகர்த்தருக்கும், ஒரு நிலக்கிழாருக்குமிடையே நிலம் காரணமாக ஏற்பட்ட வழக்கை, பிள்ளையவர்கள் செய்யுள் ஒன்றை எழுதி, ஆதினகர்த்தருக்கு அனுப்பி வெற்றியும் கண்டார்.

காஞ்சி காமக்கோடி பீடம் சங்கராச்சாரியார், நாகைக்கு வருகை தந்திருந்த போது, பிள்ளையவர்களின் புலமை கேட்டறிந்து,  பிள்ளையவர்களைச் சந்தித்தார். பிள்ளையவர்களின் கம்ப ராமாயணப் பகுதியைக் கேட்டு மகிழ்ந்து, பரிசில் கொடுத்து ஆசி வழங்கினார்.

ஆசிரியராக:

            இளமைக் காலத்திலேயே அதாவது தாம் பயின்று வந்த காலத்திலேயே, திரிசிரபுரத்தில் ஓய்வு நேரத்தில், தமக்குத் தெரிந்த நூல்களைப் பாடங்கேட்க விரும்புகிறவர்களுக்குப் பொருள் சொல்லி வந்தார். இப்பயிற்சி இவர் தொடர்ந்து சென்ற இடங்களில் எல்லாம் பயில்வதற்கும், பயிற்றுவிப்பதற்கும் துணை செய்தது.

சென்னையில் புலவர்களிடத்தே பாடம் கேட்டும் மாணாக்கருக்கு, பாடம் சொல்லியும் வந்தார். புரசைவாக்கம் பொன்னம்பல முதலியார் கரிவரதப்பிள்ளை ஆகியோர் இவரிடம் பயின்றோரில் குறிப்பிடத் தகுந்தவர்.

பிள்ளையவர்கள் பலவிடத்தும் பலமுறை சென்று வந்து ஒவ்வொருவரிடத்தும் ஒவ்வொரு நூலைக் கற்றுக் கொண்டவராதலில், தம்மைப் போல் தம்மாணவர்கள் வருந்தக் கூடாது எனக் கருதி, அவர்களை அலைக்கழிக்காமல் வேண்டிய பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஏழை மாணவர்களுக்கு, உணவு போன்ற வசதிகளையும் செய்து கொடுத்து, பாடம் கற்பித்தார்.

இவரிடம் பாடம் கேட்ட சி.தியாகராச செட்டியார் தான், தாம் பார்த்த தமிழாசிரியர் பணியை உ.வே.சாமிநாதையருக்குப் பெற்றுத் தந்தவர்.

பிற்காலக் கம்பர்:

            சான்றோரைக் காணும் பொருட்டு பல இடத்திற்குச் சென்றவர், அங்கெல்லாம் புலவர் பெருமக்களாலும், செல்வர்களாலும் தம் மாணாக்கராலும் வேண்டிக் கொள்ளப் பட்டுப் பல நூல்களைப் படைத்தார். “பிற்காலக் கம்பர்” என்று போற்றப்பட்ட பிள்ளையவர்கள், ஆயிரக்கணக்கான செய்யுள்களைப் படைத்து, பாடிச் சென்றார். எண்ணற்ற தலபுராணங்கள், சரித்திரங்கள், மான்மியம், காப்பியங்கள், பதிகங்கள், பதிற்றுப்பத்தந்தாதி, திரிபந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி, மாலை, பிள்ளைத் தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி, சிலேடை , பிறவகை, சிறப்புப் பாயிரங்கள், தனிப் பாடல்கள் என வகைகளே பலவாகும் போது, படைப்புகளின் எண்ணிக்கை அதிகம் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை.

சொற்பொழிவாளர் பிள்ளை:

            நூற்றுக்கணக்கானவர் முன்பு திரிசிரபுரத்தில் பெரியபுராணச் சொற்பொழிவை நாள்தோறும் நடத்தினர். இதில் பொறாமை கொண்ட வேற்று மதத்தினர் ஒருவர், சொற்பொழிவு நடத்தும் இடத்தின் உரிமையாளர் மூலம் சொற்பொழிவை நிறுத்தினார். ஆனால் அன்பர்களின் முயற்சியால், இடம் மாறியதே அன்றி,   சொற்பொழிவு நிறுத்தப் படவில்லை.

தொகுப்பும் பதிப்பும்:

            இளமையில் திரிசிரபுரத்தில் பயின்ற போதும், ஆசிரியர் பலரிடம் கற்ற போதும், நல்ல நூல்களைப் படியெடுத்துக் கொள்ளும் பழக்கத்தைக் கொண்டார். அவற்றைத் தொகுத்தும் வைத்துக் கொண்டார். சென்னைத் தாண்டவராயத் தம்பிரானிடம், கச்சியப்ப முனிவர் இயற்றிய பேரூர்ப் புராணத்தை வாங்கி படித்தார்.

இவரது அரும்பணி, தமிழகத்தில் பனையோலைச் சுவடிகளாக இருந்தவற்றை, நூல் வடிவில் உருவாக்கிய, உ.வே.சாமிநாதையருக்கு ஏடுகளைத் தேடிப் பெற்றுப் பதிப்பிக்கும் ஆர்வத்தைப் பெரிதும் வளர்த்தது.

இயற்கை இகந்த புகழ்:

            கடவுள் வழிபாடு, தல யாத்திரை, தீர்த்த நீராடல், ஞானியர் இயல்பு, ஆதீன மரபு, தமிழர் திருமணம், புராண பாராயணம், சமுதாய பழக்க வழக்கம் மற்றும் நம்பிக்கைகள், கிரகண பழக்கம், வீரர்தம் நடுக்கல், சமூக ஒற்றுமை, பழமொழி என மறைக்கப்பட இருந்த மாபெரும் வரலாற்றுச் சுவடுகளை, ஆவணமாக வழங்கியவர் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்.

            யாப்பு மரபில் மட்டுமின்றி, புதுவகை இசைப் பாடல்கள், புதிய சொல்லாக்கம், பழஞ்சொற்கள் பயன்பாடு, வடசல் கூட்டுத் தொடர் – சிறப்பு என புதுமையை வரவேற்று, தன் படைப்பிலேற்றம் தந்தவர் இவர். தாம் சார்ந்திருந்த சைவ ஆதின மரபினை மீறாமல், இலக்கியப் பணியையும், சமயப் பணியையும் செய்து வந்துள்ளார்.

இப்படி ஒப்பாரும், மிக்காரும் இல்லாத பிள்ளையவர்கள், 1.2.1876 அன்று, இயற்கை எய்தினார்.

  • முனைவர் வே. கீதப்ரியா, உதவிப் பேராசிரியர்

Share it if you like it