மகாவீர் ஜெயந்தி என்பது சமணர்களுக்கான மிக முக்கியமான தினமாகும். புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவரும் சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரான மகாவீரர் பிறந்த நாளை மகாவீர் ஜெயந்தியாக சமணர்கள் கொண்டாடுகின்றனர். கிரிகோரியன் நாட்காட்டியில் பொதுவாக மார்ச் மாதத்தின் பிற்பகுதியிலோ அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்திலோ மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்து நாட்காட்டியின் படி சைத்ரா மாதத்தின் 13 வது நாள் அல்லது சைத்ரா மாதத்தில் வளர்பிறை சந்திரனின் 13 வது நாளில் மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மகாவீரர் பீகாரில் உள்ள குண்டலகிராமத்தில் பிறந்தார். முதலில் வர்த்தமானாக அறியப்பட்ட மகாவீரர் கிமு 599 அல்லது கிமு 615 இல் பிறந்தார். மகாவீரர் கிமு 615 இல் பிறந்தார் என்று ஜைன மதத்தின் திகம்பர் பள்ளி கூறுகிறது, ஆனால் ஸ்வேதாம்பரர்கள் அவர் கிமு 599 இல் பிறந்தார் என்று நம்புகிறார்கள். இருப்பினும், இரு பிரிவினரும் மகாவீரர் சித்தார்த்தா மற்றும் திரிசாலாவின் மகன் என்று நம்புகிறார்கள்.
புராணத்தின் படி, ரிஷபதேவா என்ற பிராமணரின் மனைவி தேவானந்தா அவரைக் கருவுற்றார். ஆனால் தேவர்கள் அந்த கருவை ராணி திரிசாலாவின் கருப்பைக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. மகாவீரர் பிறப்பதற்கு முன், அவரது தாய் திரிசாலா 16 கனவுகளைக் கண்டார். இந்த கனவுகள் ஒரு பேரரசர் அல்லது தீர்த்தங்கருக்கான வருகையைக் குறிக்கிறது என்று ஜோதிடர்களால் விளக்கப்பட்டது. மகாவீரருக்கு 30 வயதாக இருந்தபோது, தனது அரச வாழ்க்கையை துறந்தார்.
ஆன்மீக பாதையைத் தேடி தனது உலக உடைமைகள் அனைத்தையும் கைவிட்டார். அவர் உலக இன்பங்களிலிருந்து விலகி, தியானம் செய்து 12 வருடங்கள் துறவற வாழ்க்கை நடத்தினார். சத்தியத்தையும் ஆன்மீக சுதந்திரத்தையும் தேடிய மகாவீரர், இறுதியில் ஞானம் பெற்றார்.
அதன் பின் அவர் மக்களுக்கு தர்மநெறியை எடுத்துரைத்தார். அவர் தன் 72 வயதில் மரணம் அடையும் வரை 30 ஆண்டுகள் மக்களுக்கு போதித்தார்.
மகாவீரர் ‘அஹிம்சா’, ‘சத்யா’, ‘அஸ்தேயா’, ‘பிரம்மச்சார்யா’, மற்றும் ‘அபரிகிரஹா’ என்ற 5 பாதைகளை போதிக்கிறார். அதன் அர்த்தம் அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம் மற்றும் பற்றில்லாமை ஆகும் இந்த ஐந்திலும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். இயற்கையின் அறிவியல் விளக்கங்கள் மற்றும் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தின் அடிப்படையில் மகாவீரர் தனது போதனைகளை வெளிப்படுத்தினார். மகாவீரரின் போதனைகள் அவரது முக்கிய சீடரான இந்திரபூதி கௌதமரால் ஒன்றாக இணைக்கப்பட்டது.
இன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவில் 45 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், சமண மதத்தைப் பின்பற்றுகிறார்கள். மகாவீரரை தங்கள் குருவாகவும் ஒரு அவதார புருஷராகவும் அவர்கள் வணங்குகிறார்கள்.
மகாவீரரின் போதனைகளை சமண மதத்தை பின்பற்றும் ஜெயின் சமூகத்தினர் மட்டுமல்லாமல் மற்றவர்களும் பின்பற்றுகின்றனர்.
சமணர்கள் அகிம்சை வழியைப் பின்பற்றி நடக்கிறார்கள். எந்த உயிருக்கும் தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளனர்.
சமண மத துறவிகள் சுவாசிக்கும்போது கவனக்குறைவாக பூச்சியைக் கொல்லும் வாய்ப்பைத் தடுக்க முகமூடிகளை அணிவார்கள். சமண மதம் ஒரு நித்திய (சனாதன) மதம் (தர்மம்) என்றும் தீர்த்தங்கரர்கள் சமண பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சுழற்சியையும் வழிநடத்துகிறார்கள் என்றும் சமணர்கள் நம்புகின்றனர். ஆன்மாக்களின் செயல்பாடு ஒன்றுக்கொன்று உதவுவது என்பது சமண மதத்தின் குறிக்கோள். மேலும் சமண மதத்தில் தாமோகார மந்திரம் மிகவும் பொதுவான மற்றும் அடிப்படை பிரார்த்தனையாகும்.
மகாவீர் ஜெயந்தி எப்படி கொண்டாடப்படுகிறது? மகாவீர் ஜெயந்தியை உலகெங்கிலும் உள்ள சமணர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்த நாள் பிரார்த்தனைகள் மற்றும் உண்ணாவிரதத்துடன் குறிக்கப்படும் ஒரு திருவிழா. மகாவீரர் பிறந்த கிழக்கு மாநிலமான பீகாரில் இந்த தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் கொல்கத்தாவில் உள்ள பரஸ்நாதா கோவிலில் ஒரு பெரிய கொண்டாட்டமே நடைபெறுகிறது. மகாவீரரின் போதனைகளைப் பரப்புவதற்கும், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதற்காகவும் ஜெயின் சமூகத்தினரால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள ஜெயின் சமூகத்தினர் புனித மகாவீரரின் பிறந்தநாளை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். மகாவீர் ஜெய்ந்தி அன்று மகாவீரரின் சிலை ரதத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. வழியில் மதப் பாடல்கள் பாடப்படுகின்றன. மகாவீரரின் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மகாவீர் ஜெயந்தி அன்று ஜெயின் கோவில்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் நன்கொடைகளும் வழங்கப்படுகின்றன.
இந்த நாளை உலகெங்கிலும் உள்ள சமணர்கள் சமூக தொண்டு செய்வதன் மூலமும், பிரார்த்தனைகள் செய்வதன் மூலமும், விரதங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும், ஜெயின் கோவில்களுக்குச் செல்வதன் மூலமும், வெகுஜன பிரார்த்தனைகளை நடத்துவதன் மூலமும், தியானம் செய்வதன் மூலமும் கொண்டாடுகிறார்கள்.
மகாவீரர் வரையறுத்துள்ள அறத்தின் வழியைப் பிரசங்கிக்க துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் சொற்பொழிவுகள் கோயில்களில் நடத்தப்படுகின்றன.
இந்த நாளில், மக்கள் மகாவீரரின் போதனைகளை நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.மேலும் எதிர்காலத்தில் யாரையும் காயப்படுத்த மாட்டோம் என்று வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்.