4 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மையத்தை துவக்கினார் கமல்ஹாசன். 2019 நாடாளுமன்ற தேர்தலில் 3.78% வாக்குகளையும், 2021 சட்டமன்ற தேர்தலில் 2.6% வாக்குகளையும் மட்டுமே பெற்றது. பின்னர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியமானார்கள். உள்ளாட்சி தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்தது. கமலும் தனது திரைப்பட தொழிலை கவனிக்க சென்று விட்டார். இதையடுத்து கட்சியில் எஞ்சியுள்ள தொண்டர்கள், நிர்வாகிகள் சோர்வடைந்துள்ளார்கள்.
திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்று என கமல் கூறி கொண்டார். தற்போது அண்ணாமலை தலைமையில் பாஜக எழுச்சி பெற்று, 3வது சக்தியாக உருவெடுத்து விட்டது. அண்ணாமலை இளைஞர்களை ஈர்த்து வருகிறார். ஏற்கனவே 67 வயதாகி விட்ட கமல்ஹாசன், மாற்று அரசியல் சக்தியாக உருவெடுக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகும் என்பதே நிதர்சனம். இதை மிகவும் தாமதமாக கமல் உணர்ந்துள்ளார்.
இவரது எண்ணத்தை காங்கிரஸ் மோப்பம் பிடித்துள்ளது. தமிழகத்தில் இளைஞர்களை ஈர்க்க கூடிய தலைவர்கள் யாருமே காங்கிரசில் இல்லை. எனவே மக்கள் நீதி மய்யத்தை காங்கிரசுடன் இணைக்குமாறு, கமலுக்கு தூது அனுப்பப்பட்டுள்ளது. ராகுல் காந்தி சென்னை வந்த போது, இது குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துள்ளார். அப்பொழுது, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தி.மு.கவில் இணைவதற்கு மட்டுமே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். முதலில் நமது கட்சியின் வளர்ச்சி குறித்து சிந்திப்போம், என்று ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.